வெள்ளி, 13 அக்டோபர், 2023

பணத்தைப் பிடி... படம் பிடி! திமுகவை நோக்கி தீவிரமாகும் ED வேட்டை!

 மின்னம்பலம் Aara : “2022 இல் மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி,
அவருக்கு நெருக்கமான அபிர்தா சாட்டர்ஜி உள்ளிட்டோரை குறிவைத்து கடந்த 2022 இல் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அப்போது இருவர் தொடர்புடைய இடங்களில் கட்டுக் கட்டாக, கத்தை கத்தையாக பணமும், கொத்துக் கொத்தாக தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
 இதை இ.டி. அதிகாரிகளே வீடியோ எடுத்து, அது சமூக தளங்களில் பரவியது.
இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
கடந்த மே மாதம் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.


அதன் பின் ஜூன் மாதம் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பங்களாவிலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது.
டாஸ்மாக் தொடர்பான பணப் பரிமாற்றங்கள் பற்றி செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்கள், அவருடைய தம்பி அசோக் குமாருக்கு தொடர்புடையவர்கள் என்று சல்லடை போட்டது அமலாக்கத் துறை.

‘அதையடுத்து செப்டம்பர் முதல் வாரம் தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளை மையமாக வைத்து அமலாக்கத்துறை சோதனை தீவிரமானது. அரசால் நடத்தப்படும் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு மணல் அள்ளப்பட்டு அது கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு அது வேறு சில தனியார் கைகளுக்கு போயிருக்கிறது என்பதுதான் அமலாக்கத்துறை சோதனைக்கு சொல்லப்பட்ட காரணம். இதற்கான ஆதாரங்களைத் தான் அமலாக்கத்துறை தேடியது.

ED target DMK for cut the election currency network

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மணல் யார்டும் அரசின் வசமே இருக்கிறது. நீர்வளத்துறை பொறியாளர் பெயரில்தான் இதன் உரிமம் இருக்கும். ஆனால் ஆற்றில் இருந்து பொக்லைன் மூலம் மணலை தோண்டியள்ளி, அதை யார்டில் கொண்டுவந்து கொட்டுவது அதன் பின் அவற்றை லாரிகளில் ஏற்றி அனுப்புவது ஆகிய வேலைகளைத்தான் தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் மணலை அள்ளுவதற்காக ஜப்பான் தயாரிப்பான KOBELCO வகை பொக்லைன்களை பயன்படுத்துகின்றன. தமிழகம் முழுதும் சுமார் 110 பொக்லைன்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த KOBELCO பொக்லைன்கள் ஜப்பான் நாட்டின் மிக நவீன தயாரிப்புகள். இவற்றில் ஜிபிஆர் எஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல… பொக்லைன் எத்தனை மணி நேரங்கள் வேலை செய்கிறது, எத்தனை மணி நேரம் லோடிங் ஆகியிருக்கிறது, எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறது என்பதெல்லாம் கார் மீட்டர் போல பதிவாகிக் கொண்டே இருக்கும். ஒரு மணி நேரம் தன்னுடைய பக்கெட்டில் லோடிங் செய்தால் அதன் மூலம் 8 டாரஸ் வண்டிகளில் ஏற்றும் அளவுக்கு மணலை அள்ளக் கூடியது இந்த பொக்லைன். 500 மணி நேரம் வேலை செய்திருப்பதாக பதிவாகியிருந்தால் அதன் மூலம் 4 ஆயிரம் டாரஸ் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் அரசு பராமரிக்கும் பதிவுகளில் அவ்வளவு லாரிகள் மூலம் விற்பனையானது என்ற விவரம் இருக்க வேண்டும். இந்த பொக்லைன் மீட்டர்களையும்  வைத்துக் கொண்டு தேடியது அமலாக்கத்துறை.

ED target DMK for cut the election currency network

அப்படியும் முழுமையான தரவுகள் கிடைக்காததால், சில நாட்களுக்கு முன் கரூர் மாவட்ட மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு ஆழத்துக்குதான் மணல் அள்ளியிருக்கிறார்களா அல்லது அதைத் தாண்டி அதிக ஆழத்துக்கு தோண்டியிருக்கிறார்களா என்று டிரோன்கள் மூலமும், சில கருவிகள் மூலமும் ஆய்வு நடத்தியது அமலாக்கத்துறை. இதற்காக நீர்வளத்துறையிடம் சில நாட்கள் முன்னதாகவே அமலாக்கத் துறை அனுமதி கேட்க, இதை அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்ட மணல் குவாரி ஊழியர்கள் தோண்டிய பள்ளங்களை எல்லாம் மணல் போட்டு தூர்த்துவிட்டதாகவும் ஒரு பரபரப்பு கிளம்பியது.

இந்த பின்னணியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே திமுக மேல் மட்டத்தில் தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. இதை சிலர் துரைமுருகனிடமே தெரிவித்து அலர்ட் செய்திருக்கிறார்கள். அவர் இதுபற்றி துபாயில் இருக்கும் தனது மகன் கதிர் ஆனந்த் எம்பியிடம் தெரிவித்துள்ளார்.

அதாவது மது மூலம் கிடைத்த வருவாய் திமுகவின் கட்சி நிதிக்கு சென்றதா, எப்படிச் சென்றது? மணல் மூலம் கிடைத்த வருவாய் கட்சி நிதிக்கு சென்றதா… எப்படிச் சென்றது? அதன் ரூட் என்ன?என்பதுதான் ரெய்டுகளின் நோக்கம். இதன் மூலம் திமுகவின் தேர்தல் பட்ஜெட்டில் சேதாரத்தை உண்டாக்கி நெருக்கடி ஏற்படுத்துவதுதான் அமலாக்கத்துறைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஜெண்டா.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது, ‘கட்சி நிதி பற்றித்தான் அதிகம் கேள்வி கேட்டு குடைந்திருக்கிறார்கள். உச்சகட்டமாக ஜெகத்ரட்சகனிடம், ‘வரும் மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு 20 கோடி வீதம் 40 தொகுதிகளுக்கும் சேர்த்து 800 கோடி ரூபாய் உங்களிடம்தான் கொடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதெல்லாம் எங்கே?’ என்று கேட்டுத் துளைத்திருக்கிறார்களாம் வருமான வரித்துறையினர்.

ED target DMK for cut the election currency network

முதலிலேயே குறிப்பிட்ட மேற்கு வங்காள அமைச்சர் சம்பவம் போல… திமுக புள்ளிகளை ரெய்டு செய்து அவர்களிடம் இருந்து கத்தை கத்தையாக பணம் கைப்பற்ற வேண்டும், அதை படம் பிடித்து ஊடகங்கள், சமூக தளங்கள் மூலம் பரப்பி பொது மக்கள் மத்தியில் திமுகவுக்கு ஊழல் முத்திரை குத்த வேண்டும் என்பதுதான் அமலாக்கத்துறைக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை என்கிறார்கள். திமுகவின் தேர்தல் பொருளாதாரத்தை சிதைப்பது, அதையே படம் பிடித்து திமுகவின் பெயரையும் பொதுமக்களிடம் கெடுப்பது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில்தான் அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக