ஞாயிறு, 8 அக்டோபர், 2023

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை! பயண கட்டணம் வெளியீடு!

நக்கீரன் : தமிழகம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பயண கட்டணம் வெளியீடு!
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
இந்த கப்பலுக்கு ‘செரியா பாணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக கொச்சியில் கட்டப்பட்ட செரியா பாணி பயணிகள் கப்பல் நேற்று நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திற்கு வந்தது.
இந்த கப்பலுக்குத் துறைமுக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பலின் சோதனை ஒட்டம் இன்று நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது பயணிகள் இன்றி கப்பலின் கேப்டன் விஜு பி.ஜார்ஸ்ஜ் உடன் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்தனர்.

சிறு துறைமுகத்திலிருந்து 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகத்தை சென்றடைந்தது. அங்கிருந்து கிளம்பி நாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இதே  போன்ற சோதனை ஓட்டம் நாளையும் (09.10.2023) நடைபெற உள்ளது.

இந்த கப்பலின் பயண கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 20 ஆம் தேதி நாகை - காங்கேசன் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்த பணிகளைத் தமிழக பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக