செவ்வாய், 24 அக்டோபர், 2023

ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்படாத தகவல் வெளியாகியுள்ளது

tamil.oneindia.com : மாஸ்கோ: ரஷ்ய அதிபர் உடல்நிலை குறித்துக் கடந்த சில காலமாகவே தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது புதிய பரபர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் புதின் அதிபராக இருக்கிறார். அங்கே பல ஆண்டுகளாக அதிபர் பதவியில் அவரே தொடரும் நிலையில், சாகும் வரை அதிபர் பதவியில் இருக்கும்படி சட்டத்தையும் மாற்றிக் கொண்டார்.
அங்கே தேர்தல் என்ற பெயரில் அவ்வப்போது வாக்குப்பதிவு நடந்தாலும் கூட பெரும்பாலும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு எதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிக்கப்படும்.
புதின்: இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். அவருக்குப் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எல்லாம் தகவல் கடந்த காலங்களில் வெளியானது.

மேலும், புதினின் கைகளில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால் ஏற்பட்ட ஊசி மார்க்குகள் இருப்பதாகவும் நரம்பியல் பிரச்சினை காரணமாக அவரால் தனது கால்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்படாத தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஒருவர், ஜெனரல் எஸ்விஆர் என்ற பெயரில் அங்கே நடக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்களை மேற்குலக ஊடகங்களுடன் பகிர்வதுண்டு.

அந்த நபர் தான் இந்தத் தகவல்களையும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு: அன்றைய தினம் இரவு 9 மணியளவில் புதின் அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தரையில் படுத்தபடியே புதின் இருந்துள்ளார். அங்கே அருகே மேஜை கவிழ்ந்து இருந்தது. மேலும், டிரிங்க்ஸ் மற்றும் உணவும் அங்கே சிதறிக் கிடந்துள்ளது.

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே மேஜை மற்றும் உணவை அவர் தட்டி விட்டிருக்கலாம் என்றும் ஜெனரல் எஸ்விஆர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது: அப்போது ஏற்பட்ட சத்தம் காரணமாகவே புதினை சரியான நேரத்தில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் மாளிகையில் எப்போதுமே மருத்துவர்கள் இருக்கும் நிலையில், அவர்களை அழைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளைக் கொண்ட அறைக்கு புதினை மருத்துவர்கள் கொண்டு சென்றனர்.

அங்கு முதற்கட்ட சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டதால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சிறிது நேரத்தில் புதின் சுயநினைவு பெற்றார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 ரஷ்ய அதிபர் மாளிகை: இதனை ரஷ்ய அதிபர் மாளிகை ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.

தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களிலும் கூட புதின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் சமயத்தில் ரஷ்ய அதிபர் மாளிகை பெரும்பாலும் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ரஷ்யாவில் உள்ள உயர்மட்ட தலைவர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதின் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதினுக்கு எதாவது ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து விரைவில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் போர் தொடங்கியது முதலே புதின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இருப்பினும், புதின் ஆரோக்கியமாக இருப்பதாகவே ரஷ்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக