வியாழன், 19 அக்டோபர், 2023

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Dinamalar : சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது.இதனையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜியின் மருத்துவ காரணங்கள் ஏற்கும் வகையில் இல்லை. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு உள்ளதால், ஜாமின் வழங்க முடியாது. அமைச்சராக உள்ளதால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சியை கலைக்க வாய்ப்பு உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது. வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய புகாரும் உள்ளதால் ஜாமின் மறுக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

மேல்முறையீடு

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக நாளையே விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை அக்.,30 ம் தேதி நடக்கும் எனக்கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக