சனி, 7 அக்டோபர், 2023

அமைச்சர் டயானா : பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன்! பெண் அமைச்சரை நாய் என்று கூறிய எதிர்க்கட்சி எம்பி!

File video

தேசம் நெட் - அருண்மொழி  : பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்தார்.
தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததாக குறிப்பிட்டு சபையில் வியாழக்கிழமை (05) சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
பாராளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கேயும் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. பெண்களை யார் என்று நினைத்தீர்கள்.
பெண்களை பெட்டை நாய் என்று இந்த சபைக்குள் கூற முடியாது. பெண்களிடம் கன்னத்தில் அறைவாங்கும் நாளில் புரியும்.
அதனால் பெண்களை அவதித்து பேசுவது இது முதல் தடவையல்ல.



இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான மோசமான வார்த்தை பிரயோகங்கள் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அதனால் தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் பெண்களை மோசமாக பேசுபவர்களுக்கு என்னிடம் தான் கன்னத்தில் அறைவாங்க நேரிடும்.

மத்தும பண்டார கடந்த நாள் பாராளுமன்றத்தில் என்னை ‘தகாத வார்த்தைகளால் திட்டினார். இது உண்மையில் வார்த்தைகளின் வடிவத்தில் பாலியல் துஷ்பிரயோகம். இது 52 சதவீத மக்கள்தொகை கொண்ட நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பாராளுமன்றத்திற்கு எம்.பி.க்களை தேர்வு செய்வது பெண்களே. பெண்களை இழிவுபடுத்த இந்த எம்.பி.க்களுக்கு உரிமை இல்லை. அவர் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.எதிர்க்கட்சியில் என் மீது வெறுப்பு கொண்டவர்கள் அதிகம். அவர்களால் ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. மத்தும பண்டார எனது புடவைகளில் ஒன்றை அணிந்து ஒரு பெண்ணின் வேலையைச் செய்யலாம். நான் அவரது கால்சட்டை ஒன்றை அணிந்து ஒரு ஆணின் வேலையைச் செய்ய முடியும் என்றார்.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பெண்கள் தொடர்பான கொள்கைகளில் எதிர்க்கட்சியினராகிய ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பதவிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாவட்ட அமைப்பாளர்களும் சரி ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதை அவதானிக்க முடிகின்றது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி குறித்த தரப்பினரிடம் இது பற்றி கேளிவி எழுப்பியிருந்த போதிலும் கூட சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இது தொடர்பான எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக