செவ்வாய், 3 அக்டோபர், 2023

மு.க.ஸ்டாலின் பேச்சு திமுகவில் நிலவும் உள்கட்சி பூசலின் வெளிப்பாடா? திடீர் எச்சரிக்கை ஏன்?

BBC Tamil - ரமிளா கிருஷ்ணன் : எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து, காணொளி மூலமாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஞாயிறு அன்று (அக் 1) கலந்துரையாடிய திமுக தலைவர் ஸ்டாலின், "தேர்தலில் வெற்றி பெறாத தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதற்கு தயங்கப் போவதில்லை என்றும், அவர்கள் கட்சியில் மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் மாற்றம் செய்யப்போவதில்லை" என்றும் காட்டமான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்.
திமுகவை பொருத்தவரை, இதுவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், தேர்தல் முடிவுகள் வந்தபின்னர், தோல்வியுற்ற தொகுதிகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது வழக்கம். தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன என்று ஆராயப்பட்டு, அதனை அடுத்த தேர்தலில் சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள்தான் வழங்கப்பட்டுவந்தன.ஆனால் தோல்வியுற்ற தொகுதி இடம் பெற்றுள்ள மாவட்டத்தை நிர்வகிக்கும் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது இதுதான் முதல்முறை, என திமுகவைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகி ஒருவர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ள செய்தி எதனை உணர்த்துகிறது என்ற கேள்வி எழுகிறது. இதன்மூலம், திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கும் உள்கட்சி போட்டிக்கு ஸ்டாலின் முடிவுகட்ட முயற்சிக்கிறாரா அல்லது, தேர்தல் களத்திற்கு நிர்வாகிகளை முடுக்கிவிடுவதற்கான தீவிர முயற்சி எடுக்கிறாரா என்றும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.

முதலில், ஸ்டாலின் பேசிய உரையின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்:
    மாவட்டச் செயலாளர்கள், மூத்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் அது. பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால், உடனடியாகக் காணொளி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டதால், இந்த நேரத்தில் பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.
    எந்தவொரு தனி மனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம் என கூறி உள்கட்சி பூசல் குறித்து மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடையும் தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களின் பதவியை மாற்றியமைப்பதற்கும் தயங்கப் போவதில்லை, அவர்கள் மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக நிர்வாகிகளின் கருத்து என்ன?
ஸ்டாலினின் உரையில் சொல்லப்பட்ட விவரங்கள் திமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் என்ன விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவிடம் பேச முற்பட்டபோது, கட்சி தலைவர் தெரிவித்த கருத்துக்கு புதிய விளக்கம் தர தான் தயாராக இல்லை என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில்குமாரிடம் பேசியபோது, "மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கும்போது அதனை தொண்டர்கள், மூத்த உறுப்பினர்கள் மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால்தான் ஸ்டாலின் வெளிப்படையாக பேசியிருக்கிறார்" என்பது அவரின் கருத்தாக இருந்தது.

தேர்தல் வேலைகள் துரிதமாக நடந்துவருவதால், இதுபோல கட்சியின் தலைவர் அறிவுறுத்துவது மிகவும் தேவையான ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ''இதனை நாங்கள் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. சரியாக வேலை செய்யவேண்டும், வெற்றியை வசமாக்குங்கள் என்று அவர் சொல்வதாகதான் பார்க்கிறோம்,''என்று சொல்கிறார்.

மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ஏன்?

செந்தில்குமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
''உள்கட்சி பூசல் ஆரோக்கியமானது''
தொடர்ந்து, திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு குழுவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை தொடர்பு கொண்டோம். முதலில் தோல்வி அடைந்த தொகுதியில் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்களா என்று கேட்டபோது, அதற்கான தேவை ஏற்படாது. நாங்கள் எல்லா தொகுதியிலும் வெற்றி பெற்றுவிடுவோம்,'' என அதீத நம்பிக்கையுடன் பேசுகிறார்.

ஸ்டாலினின் கருத்துகள் கட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த அவசியத்தை மேலும் உணர்த்தியுள்ளதாக கூறும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''அவரின் வார்த்தைகள் கடினமானதாக தோன்றலாம். ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கு என்பது எங்களின் கட்சியின் வெற்றியை உறுதிசெய்வது என்பதுதான். அதனை காலத்திற்கு ஏற்ப கடினமான வார்த்தைகளில் சொல்வதில் தவறில்லை. வளர்ச்சி வேண்டும், வெற்றி வேண்டும் என எண்ணுபவர்கள் கட்சியில் மேலும் தீவிரமாக உழைப்பார்கள்,'' என்கிறார்.

ஆனால், உள்கட்சி பூசல் பற்றி கேட்டால், அது கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்று என்ற பதிலை தருகிறார். அதாவது கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறாரகள் என்றால், அந்த கட்சி பலரை வளர்த்துள்ளது என்று பொருள் என்ற புரிதலுடன் உள்கட்சி பூசலை அணுகவேண்டும் என்பது அவரின் வாதம்.

பல மாவட்டங்களில் உள்கட்சி பூசல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் அவர், அது கட்சியின் வளர்ச்சியை மேலும் ஆரோக்கியமான வளர்ச்சியாக மாற்றும் என்றும் சொல்கிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

''ஒரு அரசியல் கட்சி ஒரு சில நபர்களை மட்டுமே நம்பியிருக்கும் அமைப்பாக இருக்கக் கூடாது. உள்கட்சி பூசலில் ஓவ்வொரு தலைவரும், தங்களது பலத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதேநேரம், தேர்தல் என்று வரும்போது, அதனை தாண்டி, ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும், வெற்றி பெற்றுத் தருவதில்தான் போட்டி இருக்க வேண்டும் என்பதைதான் எங்கள் தலைமை எங்களுக்கு சொல்கிறது,''என்றார்.
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ஏன்?
படக்குறிப்பு,

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக
''பயமுறுத்துவது பலன் தராது''
அடுத்ததாக, திமுகவின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து கண்காணிக்கும் விமர்சகர்களிடம் பேசினோம். மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் இரண்டு முக்கிய அம்சங்களை குறிப்பிட்டார். திமுகவில், கட்சி தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இடையில் ஒரு பெரிய இடைவெளி உருவாகியுள்ளது என்பதைதான் ஸ்டாலினின் கூற்று உணர்த்துகிறது என்பது அவரின் முதல் வாதம்.

''மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் அதிகார சண்டை நடப்பது பல காலமாக தொடரும் நிகழ்வு. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தால், மாவட்ட செயலரை மாற்றுவேன் என அவர் கூறுவது ஏற்புடையது அல்ல. சரியான நபரை பரிந்துரை செய்யுங்கள், நானும் ஆலோசிக்கிறேன் என்று சொல்வதை விடுத்து, தோல்வி அடைந்தால் பதவி பறிபோகும் என பயமுறுத்துவது தேர்தலில் வேலை செய்யாது. இதுபோன்ற பயமுறுத்தல்கள் எந்தவித பலனையும் தராது,''என்கிறார்.

மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் இடையில் உள்ள நெருக்கடியை சரியாக சமாளிக்க வேண்டும். அதற்கு பதிலாக, மாவட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வதால், கட்சி உறுப்பினர்கள் சோர்வடைவார்கள் என்றும் உணர்த்துகிறார் குபேந்திரன்.

பொது வெளிக்கு வந்த உள்கட்சி பூசல்
குபேந்திரன் சொல்வது போல திமுக உள்கட்சி பூசலை வெளிப்படுத்தும், பல சம்பவங்கள் ஊடகங்களில் செய்தியாகியுள்ளன. எடுத்துக்காட்டாக இரண்டு சம்பவங்களை பார்ப்போம்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், திருச்சி மாவட்டத்தில் பூப்பந்து கூடம் திறக்கப்படும் நிகழ்வு ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அழைக்கப்படவில்லை என்று தொடங்கிய தகராறு, திருச்சி சிவா மற்றும் கே.என்.நேரு தரப்புகளுக்கு மத்தியில் தாக்குதலாக மாறியது. இதில், மூத்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் சிலர், திருச்சி சிவாவின் வீட்டில் சேதத்தை ஏற்படுத்தினர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் நேரத்திலும் இரண்டு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையில் சன்டை நீடித்தது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறிய பின்னர்,திமுக தலைவர் ஸ்டாலின் தலையிட்ட பின்னர், அமைச்சர் நேரு, சிவாவின் இல்லத்திற்கு சென்று சுமூகமாக பேசினார்.
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ஏன்?

அடுத்ததாக, கடந்த ஜூன் மாதம், கன்னியாகுமரி மாவட்டத்தில், மூத்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் குமரி மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள நாகர்கோவில் மேயர் மகேஷ் இடையில் பொது பணிகளுக்காக டெண்டர் விடுவது தொடர்பான கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், இருவரும், பொது நிகழ்வுகளில் இணைந்து பங்குபெறவில்லை. கட்சி சார்பாக இரண்டு விதமான போஸ்டர்கள் ஓட்டுவது தொடர் நிகழ்வாக இருந்தது. ஒருகட்டத்தில், மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களில் தாமதம் பற்றி வெளிப்படையாக தெரியவந்தபின்னர், இருவரும் சமாதானமாக இருக்கவேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

வாக்கு வித்தியாசம் முக்கியம்
இதுபோன்ற உள்கட்சி விவகாரங்களில் தீவிரமான முடிவுகளை ஸ்டாலின் எடுக்கவில்லை என விமர்சிக்கிறார் குபேந்திரன். ஸ்டாலின், அவ்வப்போது, தொண்டர்களுக்கான கடிதம் மற்றும் காணொளி போன்றவற்றில், மூத்த அமைச்சர்கள் புரிதலோடு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவதும், கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதும் போதாது என்பது அவரது கருத்து.

2024நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளை வெல்வது மட்டுமே திமுகவிற்கு வெற்றி அல்ல என தனது வாதத்தின் இரண்டாவது அம்சத்தை விளக்குகிறார் குபேந்திரன். ஆளும் கட்சியாக உள்ள திமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குவிப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்கிறார்.

''அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றால்தான், வாக்காளர்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், நாடாளுமன்ற தேர்தலை அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்று அர்த்தம். வெறும் நலத்திட்ட உதவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, வாக்குகளை திமுக பெற்றுவிடமுடியாது. ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சியை பொறுத்துதான் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது. அதற்கு கட்சியினரை மட்டுமே நம்பியிருக்க முடியாது. மக்களின் மனங்களை வெல்ல, மாவட்டத்தின் வளர்ச்சி முக்கியம். அதனை பொறுத்து மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள். அதனால்தான் ஸ்டாலின் பயமுறுத்துவது போல பேசுகிறார்,''என விளக்குகிறார் குபேந்திரன்.


குபேந்திரன், மூத்த பத்திரிகையாளர்
''கட்சி தலைவரின் எச்சரிக்கை சரியானது''
ஆனால் குபேந்திரன் சொல்வது போல, ஸ்டாலினின் பேச்சு அச்சமூட்டும் பேச்சு இல்லை என்றும் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவரும் தங்களது கட்சி உறுப்பினர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் யுக்தியைத்தான் ஸ்டாலின் பயன்படுத்துகிறார் என்ற கருத்தை முன்வைக்கிறார் அரசியல் விமர்சகர் கார்த்திகேயன்.

தேர்தல் வெற்றியை சாதகமாக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கும்போது, கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு காட்டமான செய்தியை சொல்வதும் அவரின் கடமை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் கார்த்திகேயன்.

''ஸ்டாலின் தனது கூட்டணி எந்த தொகுதியிலும் பின்னடைவை சந்திக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதிலும் இந்தியா கூட்டணியில் ஸ்டாலினின் பங்கு பிரதானமாக உள்ளது என்பதால், அவரது கட்சியினர், கூட்டணி கட்சி வேட்பாளருக்கு உழைக்கவேண்டும், கட்சியின் வெற்றியை முக்கியமானதாக கருத வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்கிறார். இதில் தவறில்லை. இதுவும் ஒரு கட்சி தலைவரின் வேலைதான், இது சரியானதுதான்,''என விவரிக்கிறார் அவர்.

உள்கட்சி பூசலை ஸ்டாலினால் சாமளிக்க முடியவில்லையா என்றும், தேர்தல் வெற்றியை பற்றிய கவலை காரணமாக மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று சொல்கிறாரா என்று கேட்டபோது, அதற்கான தேவை அவருக்கு ஏற்படவில்லை என்பது கார்த்திகேயனின் தீர்க்கமான பதில்.

கார்த்திகேயன், மூத்த பத்திரிகையாளர்
ஏற்கனவே, அதிமுக-பாஜக கூட்டணி பிளவு ஏற்பட்டுவிட்டதால், தேர்தல் குறித்த கவலை அவருக்கு எந்தவிதத்திலும் இருக்காது என்றும், உள்கட்சி பூசல் என்பது எல்லா அரசியல் கட்சிகளிலும் எப்போதும் இருக்கும் பிரச்னை என்பதால், அது ஒரு பெரிய சவால் இல்லை என்ற பார்வையை கொண்டிருக்கிறார் கார்த்திகேயன்.

ஸ்டாலினின் உரையில் உள்ள தகவல்களை சுட்டிக்காட்டி பேசும் கார்த்திகேயன், ''ஸ்டாலின் பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டதை சொல்கிறார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது, பயிற்சிபாசறைக் கூட்டங்கள் நடத்தியது பற்றியெல்லாம் சொல்கிறார். அடுத்தடுத்து நடக்கவிருக்கிற பயிற்சி பாசறைக் கூட்டம் என அடுக்கிக்கொண்ட போகிறார். அதனால், தேர்தல் குறித்த கவலை அவருக்கில்லை என்பது தெளிவு. மாவட்ட நிர்வாகிகளுக்கு மேலும் பொறுப்பு கூடியுள்ளது, கடுமையாக உழைக்கவேண்டும் என்று சொல்வதாகதான் பார்க்கமுடிகிறது,'' என்றார்.

மேலும், தேர்தல் முடிவில் ஏதாவது தொகுதியில் தோல்வி அடைந்திருந்தால்கூட, உடனே மாவட்ட செயலாளர் மாற்றப்படுவாரா என்பது கேள்விகுறிதான் என்றும் சொல்கிறார் இவர். இதுவரை எந்த தேர்தலிலும் தோல்வி அடைந்த தொகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் நீக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக