திங்கள், 9 அக்டோபர், 2023

அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பா? ஸ்டாலினை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பதில்!

மின்னம்பலம் - Aara : அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பா? ஸ்டாலினை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பதில்!
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை இன்று (அக்டோபர் 8)  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட  அக்கட்சி நிர்வாகிகள்  அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள்  இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியாக அது செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டணியில் முக்கிய  கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவரான ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். 

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  முதலமைச்சர் ஸ்டாலினை  சந்தித்தார். அவரோடு   ஜி.ராமகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்,
“வாச்சாத்தி  விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின்படி…   பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும், தமிழ்நாட்டில் சிறு குறு தொழில்கள் பற்றி பேசினோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பிரச்சினை நீண்ட காலமாகவே இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பிரச்சினைகள் சரியாக அணுகப்படவில்லை.

அதிமுக ஆட்சி போல இல்லாமல் சில முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்படாமலே இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டும் என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறோம்.

காவிரி பிரச்சினைபற்றியும் பேசியிருக்கிறோம். டெல்டாவில் விவசாயிகளால் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றவர்,

“ அதுமட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிற சூழ்நிலையில்… இந்தியா முழுதும் 5 மையங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட மாநாடு நடத்த வேண்டும் என்று எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வலியுறுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் சென்னையில் மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய பிஜேபியை எதிர்த்து, மக்கள் திரள் மாநாடு நடத்துவது அவசியமாக இருக்கிறது என்று முதலமைச்சரிடம் கூறினோம்.  அவரும் இதுபற்றி நாம் பேசித் தீர்மானிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்”  என கூறினார் கே.பாலகிருஷ்ணன். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் அக்கட்சி தலைமையில் இருந்து உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு,  “அப்படியெல்லாம் யாரும் எங்களை  அழைக்கவில்லை. அழைத்தாலும் செல்ல மாட்டோம்.  9 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தவர்களை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் கே.பாலகிருஷ்ணன்.

மேலும்,  “திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை விட கூடுதல் தொகுதிகள் கேட்போம்” என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் திமுக முதற்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிற நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சியுடனும் அந்த ஆலோசனை இன்று தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.

இந்த சந்திப்பின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார்.

வேந்தன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக