ஞாயிறு, 1 அக்டோபர், 2023

ஸ்டாலினிடம் சிக்கிய ஏழு மாசெக்கள்.. காணொலிக் கூட்டம்..

Stalin question to 7 district secretaries

minnambalam.com - Aara : “திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று (அக்டோபர் 1) மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இருந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொண்டார்.
 முதலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை ஆற்றினார்.
பொதுச் செயலாளர் துரைமுருகன் சில நிமிடங்கள் பேசினார். பின் பேசிய துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ‘வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க இருக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் பெண்கள் அதிகளவு கலந்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
காலை 10.40 மணிக்கு ஸ்டாலின், பேசத் தொடங்கினார். ‘தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் பி.எல்.ஏ-2 வாக்குச்சாவடி பாக முகவர்களை சேர்த்துள்ளோம். பி.எல்.சி- 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாக முகவர்களும், பொறுப்பாளர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இன்று முதல் வாக்காளர் குடும்பத்தினரிடமும், வாக்காளர்களிடமும் நெருங்கி பழக வேண்டும்.

தமிழ்நாடு அரசு திட்டங்கள் வாக்காளர்களுக்கு சென்றடைய, மக்களுடன் ஸ்டாலின் ஆப்- ஐ பதிவிறக்கம் செய்துகொடுக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 39 இடத்தில் வென்றோம். இந்த தேர்தலில் 40க்கு 40திலும் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலோ, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டினாலோ அந்த தொகுதியில் உள்ள மா.செ. அமைச்சர் என யாராக இருந்தாலும், சீனியர் என்று கூட பார்க்கமாட்டேன், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

பி.எல்.சி பொறுப்பாளர்கள் இன்னும் 7 மாவட்டங்களில் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும்’ என்று சொல்லி ஏழு மாசெக்கள் பெயரை வாசித்தார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளார் அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோரை அழைத்து விளக்கம் சொல்ல சொல்லி கேட்டார் ஸ்டாலின்.

அவர்களும் விளக்கம் தெரிவித்தார்கள். தொடர்ந்து அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து சரியான காரணத்தை சொல்லிவிட்டு போங்கள் என்று இறுக்கமாக கூறினார் ஸ்டாலின்.

மேலும் அவர், “சார்பு அணிகளின் பொறுப்பாளர்களை ஏன் இன்னும் நியமிக்காமல் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சேகர்பாபு, ’ மாவட்ட செயலாளரின் பரிந்துரை இல்லாமலே சில அணிகளின் மாநில நிர்வாகிகள் இஷ்டத்துக்கு பொறுப்பாளர்களை முடிவு செய்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

உடனே ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அந்த அணி நிர்வாகியைத் தேடியபோது அவர் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், சார்பு அணிகள் மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

தொகுதி பொறுப்பாளர்கள் வாரம்தோறும் தொகுதிக்கு சென்று கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஸ்டாலின், ‘தொகுதி பொறுப்பாளர்களுக்கு அங்குள்ள மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா இல்லையா? என கேட்ட போது, பெரும்பாலான பொறுப்பாளர்கள் அமைதியாக இருந்தார்கள். இவ்வாறு நடந்தகூட்டம் பகல் 12.30 மணிக்கு  முடிந்தது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக