திங்கள், 9 அக்டோபர், 2023

5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – தேதி அறிவிப்பு.. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா நவம்பர் மாதம்..

BBC News தமிழ் : சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதியும், இறுதியாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வனைத்து தேர்தல்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
திங்கட்கிழமை (அக்டோபர் 9) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்தத் தேதிகளை அறிவித்தார்.
1.77 லட்சம் வாக்குச்சாவடிகள்
இந்த ஐந்து மாநிலங்களிலும் இருக்கும் 679 தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த ஐந்து மாநிலங்களிலும் சத்தீஸ்கருக்கு மட்டும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவிருக்கிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்த ஐந்து மாநிலங்களிலும் 940 மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, எல்லைகளுக்கிடையில் கணக்கில் வராத பணம், மது, போதைப்பொருட்கள், மற்றும் இலவசப் பொருட்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்படுவது கண்காணிக்கப்படும் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்

அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் நடக்கவிருப்பதால், இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன

முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்

அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் நடக்கவிருப்பதால், இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மறும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவையே பிரதானக் கட்சிகளாகத் திகழ்கின்றன.

தெலங்கானாவில், பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகியவற்றுக்கிடையில் மும்முனை போட்டி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் எப்போது?

ஜம்மு சாஷ்மீருக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்பகுதியின் பாதுகாப்பு, மற்றும் மற்ற மாநிலத் தேர்தல்களின் தேதி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே அது முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக