செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஆ.ராசாவின் 15 சொத்துகள் பறிமுதல்” : அமலாக்கத் துறை!

 minnambalam.com - Kavi :  திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துகளை கையகப்படுத்தியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி., மீது சிபிஐ 2015ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து ஆ.ராசாவுக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை செய்தது.
இதையடுத்து அமலாக்கத் துறையும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ்  இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச்சூழலில் ஆ.ராசாவின் பினாமி பெயரிலிருந்த சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை இன்று (அக்டோபர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில், “பிஎம்எல்ஏ, 2002 இன் விதிகளின் கீழ், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகள் பினாமி கம்பெனியான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக