வெள்ளி, 6 அக்டோபர், 2023

வான் இயற்பியல் விஞ்ஞானி மேகதாத் சாஹா 130 வது பிறந்தநாள்! இன்று மக்களுக்கான அறிவியல் நாள்.

May be an image of 1 person

Muthukumar Sankaran Tuticorin :  'பாராளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கல்கத்தா தொகுதியில் போட்டியிடப் போகிறேன். என்னுடைய  Treaties on Heat நூலின் விற்பனைத் தொகையில் முன்பணமாக ஐயாயிரம் ரூபாயை விடுவிக்க வேண்டுகிறேன்.'
 பதிப்பாளருக்கு இப்படி ஒரு கடிதம் 1951இல் எழுதியவர் நம் நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவர். சோஷலிஸ்ட் முற்போக்கு அமைப்பின் ஆதரவுடன் தேர்தலில் எந்தவொரு பணவசதியும் இன்றிப் போட்டியிட்டு பெருந்தலை ஒருவரைத் தோற்கடித்து பாராளுமன்றம் நுழைகிறார். வான் இயற்பியல் விஞ்ஞானி மேகதாத் சாஹா தான் அவர்.
சர். சி.வி. ராமன் அவர்களுடன் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.  இவருடைய பெயர் பல தடவை பரிந்துரைக்கப்பட்டும்,  பரிசீலிக்கப் படாமல், இவருக்கு மறுக்கப்பட்டதன் காரணம் ஆங்கிலய அரசுக்கு எதிராக இவர் தொடர்ந்து போராடியது தான்.


சுபாஷ் சந்திர போஸ், இராஜேந்திர பிரசாத் ஆகிய விடுதலை வீரர்களுடன் கொண்டிருந்த தொடர்பு  காரணமாக அவருக்கு I.F.S. வேலை மறுக்கப்பட்டது.  தலித் என்பதால் சுதந்திர இந்தியாவில் அரசு பதவிகளும் அங்கீகாரங்களும் மறுக்கப் பட்டன.
அயனியாக்க வெப்ப  கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கியவர். 1920-ல் வெளிவந்த ‘சூரிய மண்டலத்தில் அயனியாக்கம்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது.
சூரிய நிறமாலையில் காணப்படும் உட்கரு கவர் வரிகளின் மூலத்தை விளக்கியது மட்டுமில்லாது சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவும் சமன்பாட்டை  உருவாக்கிய போது சாஹாவுக்கு வயது 25 தான்.. இவரது சாஹா சமன்பாடு குவாண்டம் இயற்பியலில் புகழ் பெற்றது.
இந்திய நாள்காட்டி முறையான சக ஆண்டு (saka era) முறையைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரப் போராடியவர். தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா-நங்கல் மற்றும் ஹிராகுட் அணைத் திட்டங்களுக்கு சாஹா செய்த கள ஆராய்ச்சிகள் தாம் பெரிதும் உதவின.
மக்களுக்கான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதே அறிவியலின் நோக்கம் ; அறிவியல் என்பது முதலாளிகளின், ஏகாதிபத்தியங்களின் ஏவலாளி அல்ல என உரத்த குரல் எழுப்பியவர்.  
"அறிவியலாளன் , நடைமுறை உண்மைகளால் தன் மனம் பிரச்சனைக்கு உள்ளாகாத வகையில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறான். நான் உச்சாணிக் கொம்பில் இருந்து இறங்கிப் படிப்படியாக அரசியலுக்கு வந்துள்ளேன். ஏன் என்றால் எனக்கான எளிய வழியில் இந்த நாட்டிற்கு நான் பயனுள்ளவனாக இருக்க விரும்புகிறேன்" . எனக் கூறிச் சென்ற இப்பேர்ப்பட்ட பேராளுமை குறித்தோ, அவருடைய அறிவியல் சமன்பாடுகள் குறித்தோ நம் பாடப் புத்தகங்களில் இல்லை.
வீட்டு வேலைகள் பார்த்து உழைத்தே தன் பள்ளி விடுதிக் கட்டணம் கட்டிப் படித்த இவரைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லித் தரவில்லை.  ‌இவரைப் பற்றி அறியும் போதே நான் ஐம்பது வயதைக் கடந்து விட்டேன்.
இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவிய இந்தியத் திட்டக்குழுவிற்கு வித்திட்டவர். 1956 பிப்ரவரி 16 ஆம் நாள் இராஷ்டிரபதி பவனில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகம் செல்லும் வழியில் கடும் மாரடைப்பு ஏற்பட்டு விழுந்து இறந்திருக்கிறார்.
இன்று அவருடைய 130 வது பிறந்தநாள். இன்று மக்களுக்கான அறிவியல் நாள்.
- முத்துக்குமார் சங்கரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக