வியாழன், 5 அக்டோபர், 2023

மழை - 100 அடியை கடந்த காவிரி கேஆர்எஸ் அணை நீர்மட்டம்

tamil.oneindia.com  -  Nantha Kumar R : பெங்களூர்: கர்நாடகா-தமிழ்நாடு காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை வெடித்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் நீர் வழங்குவதில் கேஆர்எஸ் அணை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் இது மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த 27 ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான நீர் கேஆர்எஸ் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க கேஆர்எஸ் உள்பட பிற அணைகளில் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீர் வழங்க மாட்டோம் என கர்நாடகா போர்க்கொடி தூக்கி உள்ளது.

மேலும் கர்நாடகாவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் கடந்த வாரம் பந்த் நடத்தினர். நாளை பெங்களூரில் இருந்து வாகனத்தில் ஊர்வலமாக சென்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையை வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் முற்றுகையிட செல்ல உள்ளனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து இந்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இத்தகைய சூழலில் தான் தற்போது குட்நியூஸ் வெளியாகி உள்ளது. அதாவது கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் என்பது இன்று 100 அடியை கடந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் பாகமண்டலா உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் பாகமண்டாவில் மட்டும் 146 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கான நீர்வரத்து என்பது அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பிளானே வேற.. மீண்டும் சீன்போடும் வாட்டாள் நாகராஜ்! பெங்களூர் டூ மண்டியா! நாளை கேஆர்எஸ் அணை முற்றுகைபிளானே வேற.. மீண்டும் சீன்போடும் வாட்டாள் நாகராஜ்! பெங்களூர் டூ மண்டியா! நாளை கேஆர்எஸ் அணை முற்றுகை

அதன்படி நேற்று 124.8 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் நேற்று 99.5 அடியாக இருந்தது. இன்று காலையில் அணையின் நீர்மட்டம் என்பது 100 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 100.36 அடியாக இருந்தது. அணைக்கு உள்ளே வினாடிக்கு 9,052 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,482 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

கேஆர்எஸ் அணை முழுவதுமாக 124.80 அடியை தொட்டால் அணையில் 49.452 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். தற்போது அணையின் நீர்மட்டம் 100.36 அடியாக உள்ளது. அதன்படி பார்த்தால் அணையில் 23.095 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதேபோல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் இன்னொரு முக்கிய அணையான கபினி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

அதாவது 2,284 அடி (கடல்மட்டத்தில் இருந்து) உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் என்பது 2,276.06 அடியாக உள்ளது. அணைக்கு 3,349 கனஅடி நீர் வரும் நிலையில் 1000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் 19.52 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். தற்போதைய சூழலில் அணையில் 14.85 டிஎம்சி தண்ணீர் இருப்பது உறுதியாகி உள்ளது.

கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்து வரும் நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது இருமாநில மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக