திங்கள், 25 செப்டம்பர், 2023

குட்டிமணி - தங்கதுரை வரலாற்றில் சில சொல்லப்படாத செய்திகள்

ராதா மனோகர் : இலங்கையில் 1983 நடந்த  இனக்கலவரமானது  தமிழ்நாட்டில் ஒரு பெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியது
எல்லா போராளி குழுக்களுக்கும் தமிழர் விடுதலை கூட்டணி போன்ற மிதவாத தலைவர்களுக்கும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் அளவு கணக்கில்லாத ஆதரவை நல்கிய காலக்கட்டம் அது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அனைத்து இந்தியாவே பெரும் எழுச்சியோடு ஆதரவை நல்கியது.
அப்போது இலங்கையில் நடந்து கொண்டிருந்த கலவரம் பற்றிய ஏராளமான செய்திகள் புயல் வேகத்தில் பரவியது
அவற்றில் பல பொய் செய்திகளும்  கூடவே அரங்கேறியது.
பொதுவில் கலவரங்களின் போது பரவும் செய்திகளில் உண்மை எது பொய் எது என்று கண்டுபிடிப்பது இலகுவல்ல.
ஆனால் காலம்தான் பல உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்
அந்த உண்மைகள் வெளிவரும்போது . பல சமயங்களில் காலம் கடந்து விட்டிருக்ககூடும்
ஆனாலும் எவ்வளவு காலம் கடந்தாலும் உண்மை வெளிவந்தே தீரவேண்டும்  
அதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும்.

திரு குட்டிமணி திரு தங்கதுரை திரு ஜெகன் போன்ற போராளிகளின் வழக்கில் தோன்றிய பல வழக்கறிஞர்கள் காலப்போக்கில் ஒதுங்கி கொண்டனர்.
அந்த வழக்கில் தீர்ப்பின் போது போராளிகள் தாங்கள் இறந்தாலும் தங்களின் கண்களை தானமாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்
அந்த கண்கள் மூலம் தாங்கள் தமிழ் ஈழத்தை பார்ப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்
போராளிகளின் இந்த கோரிக்கையை அவர்களுக்கு எழுதி கொடுத்தது வழக்கறிஞர் கரிகாலன் என்பது  பின்பு தெரியவந்தது
வழக்கறிஞர் திரு  கரிகாலனோடு ஜூனியர் வழக்கறிஞராக தோன்றியிருந்த திரு ஸ்ரீ ஸ்கந்த குமார் அவர்கள்  இப்போது கனடாவில் இருக்கிறார் .
இந்த செய்தி அவர் மூலம்தான் வெளியுலகிற்கு தெரியவந்தது
இதை அவர் பல தடவை பொதுவெளியில் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு முக்கிய செய்தியை அவர் கூறியிருக்கிறார்
ஜூலை இனக்கலவரத்தின்போது  வெலிக்கடை சிறைச்சாலையில் திரு குட்டிமணி திரு தங்கதுரை திரு ஜெகன் 52 போராளிகள் அங்கு கொல்லப்பட்டார்கள்.
அந்த சம்பவம் நடந்து அடுத்த நாள் அங்கு சென்று அவர்களின் உடல்களை பார்வையிட்ட வைத்திய அதிகாரி திரு எஸ் பாலசுப்பிரமணியம் என்பவரும் தற்போது கனடாவில் இருக்கிறார்
அவர் மூலம் வேறு ஒரு முக்கிய செய்தியும் வெளிவந்திருக்கிறது
 
குட்டிமணி தங்கதுரை போன்றவர்களின் கண்களை தோண்டி நிலத்தில் போட்டு தேய்த்து சிதைத்தாக அப்போது பத்திரிகைகள்  எழுதின.
அது மிகவும் தவறான ஒரு செய்தி .அப்படி ஒன்றுமே நடக்கவில்லை
அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டார்கள் என்பது உண்மைதான்.
 
ஆனால் அவர்களின் கண்கள் பற்றிய செய்தி ஒரு மிகைப்படுத்த பட்ட கற்பனைதான்
இந்த கதை முதன் முதலில் ஜூனியர் விகடன் பத்திரிகையில்தான் வெளியானது.

பின்பு அதையே எல்லா ஊடகங்களுக்கும் மறுபிரசுரம் செய்து பட்டிதொட்டி எங்கும் பரப்பின.
இதை  ஜூனியர் விகடனில் வழக்கறிஞர் திரு கரிகாலன் அவர்கள்தான் எழுதினார்
அவர் முன்பு தமிழரசு கட்சி உறுப்பினராக இருந்தார்
போராட்டத்திற்கு வலு சேர்க்கும் என்று கருதி அவர் இப்படி எழுதினர் போலும்!
வரலாற்றில் உண்மைகள் மக்களுக்கு தெரியவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இச்செய்திகளை இங்கே எழுதியுள்ளேன்
இதன் மூலம் இறந்த போராளிகளின் மாண்பு எந்த வகையிலும் குறைவு படாது.
அவர்களின் தியாகம் என்று போற்றுதற்கு உரியவைதான்!

    ( பி கு :    கரிகாலன்  தான் எழுதிக் கொடுத்த வசனங்களுக்கு வலுப்படுத்தவே இந்தியாவில் இருந்து தான் காணாத ஒரு விடயத்தை எழுதியுள்ளார் என்பது பின்னர் வெளியானது- வழக்கறிஞர் திரு ஸ்ரீ ஸ்கந்த குமார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக