செவ்வாய், 5 செப்டம்பர், 2023

நடிகை ரோஹினிக்கும் இடைவிடாத மிரட்டல்கள்! சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய 'தமுஎச' துணைத் தலைவர்

tamil.oneindia.com  -  Mathivanan Maran :  சனாதன ஒழிப்பு மாநாட்டை  சென்னையில் நடத்தியதால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (தமுஎச) துணைத் தலைவரும் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவருமான நடிகை ரோஹினிக்கும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும்
இதற்கு அஞ்சப் போவதில்லை என நடிகை ரோஹினி தெரிவித்துள்ளார் எனவும் தமுஎச தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தமுஎச வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
சனாதன கருத்தியல் ஒழிப்பு: உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. அவற்றை காணும் எவரொருவரும் இந்த மாநாட்டின் எந்தவொரு நிகழ்வும், யாருடைய உரையும் குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிராக அல்லாமல், பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி ஒடுக்கிவருகிற சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்றே அமைந்திருக்கிறது என்பதை உணரமுடியும்.

அரசியல் ஆதாய பொய் பிரசாரம்: மாநாட்டில், ஆன்மீகப்பற்றுடைய அய்யா சத்தியவேல் முருகனார், இறை நம்பிக்கைக்கும் சனாதனத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்று பேசியதுடன் சனாதனம் இழைத்த அநீதிகளை எடுத்துரைத்தார். கர்நாடத்தில் இயங்கிவரும் தேவதாசி ஒழிப்புச் சங்கத்தின் மாநிலச்செயலாளர் மாலம்மா, சிறுமிகள் தேவதாசிகளாக ஆக்கப்பட்டு பாலியல் சுரண்டலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதற்கு அடிப்படையாக உள்ள சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்று கள அனுபவத்திலிருந்து ஆவேசமாக எடுத்துரைத்தார். இவர்கள் பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாத பாஜகவினர், சனாதனக் கருத்தியலை ஒழிக்கவேண்டும் என்று உதயநிதி பேசியதை "சனாதனத்தைப் பின்பற்றும் மக்களை ஒழிக்கவேண்டும்" என்று அவர் பேசியதாக திரித்து அரசியல் ஆதாயத்திற்காக மோசடிப்பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் உறுதிக்கு பாராட்டுகள்: இந்த மோசடியையே ஆதாரமாக வைத்துக்கொண்டு டெல்லியிலும் பீஹாரிலும் அவர் மீது புகாரளித்துள்ளனர். அவர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர். இதற்கெல்லாம் பயந்து சனாதன ஒழிப்புப் பற்றி தான் தெரிவித்த கருத்தினை திரும்பப்பெறப் போவதில்லை என்று உறுதிபட அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது தமுஎகச.

நடிகை ரோஹினிக்கும் மிரட்டல்: அலைபேசி மூலமாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் தனக்கு வரும் மிரட்டல்களைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என்று சனாதன ஒழிப்பில் தனக்குள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்திவரும் தமுஎகச மாநிலத் துணைத்தலைவரும் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவருமான திரைக்கலைஞர் ரோஹினிக்கும் பாராட்டுகள்.

ஒழிக சனாதனம்: சனாதன ஒழிப்பு என்று பேசத் தொடங்கியதற்கே சனாதனவாதிகளின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு, சனாதனத்தினால் தலைமுறை தலைமுறையாக அநீதிக்காளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் குமுறலில் இருந்தே சனாதனம் ஒழிக என்கிற முழக்கம் உயிர்த்தெழுந்துள்ளது என்கிற உண்மையை உணர்த்தும் பணியை தமுஎகச தொடர்ந்து மேற்கொள்ளும்.

ஒழியட்டும் சனாதனம்! மன்னிப்பு கேட்க முடியாது-மிரட்டலுக்கு அச்சமில்லை! - உதயநிதி ஸ்டாலின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக