செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியாவிடை: மயங்கி விழுந்த பாஜக எம்.பி!

minnambalam.com - christopher : சிறப்புக்கூட்டத்தொடர் இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது. மேலும் புதிய கட்டிடம் தான் இந்தியாவின் நாடாளுமன்றம் என மக்களவை செயலகம் இன்று (செப்டம்பர் 19) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து 75 ஆண்டுகால பெருமை வாய்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் சேர்ந்து இன்று காலை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


முதல் வரிசையில் மோடி… கடைசியாக ராகுல்…
பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் உள் முற்றத்தில் நடைபெற்ற இந்த புகைப்பட அமர்வின் முதல் வரிசையில் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடையே பிரதமர் மோடி அமர்ந்திருந்தார்,

மேலும் அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் 93 வயதான ஷபிக் உர். -ரஹ்மான் பார்க், மூத்த தலைவர்களான சரத் பவார் (என்சிபி) மற்றும் ஃபரூக் அப்துல்லா (என்சி) மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மனிஷ் திவாரியுடன் இரண்டாவது கடைசி வரிசையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி, வசந்த் உள்ளிட்ட எம்.பிக்கள் ஆகியோர் கடைசி வரிசையில் நின்றிருந்தனர்.

இரு அவை உறுப்பினர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதால், சிலர் முதல்வரிசைக்கு கீழே தரையிலும் அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

பெண் உறுப்பினர்கள் வண்ணமயமான புடவைகளை அணிந்து வந்த நிலையில், பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் வெள்ளை குர்தா- பைஜாமாக்களை அணிந்து புகைப்பட அமர்வில் பங்கேற்றுள்ளனர்.

பாஜக எம்.பி மயக்கம்!

இதற்கிடையே குஜராத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நர்ஹரி அமீன் (வயது 68) மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சக எம்.பிக்கள் ஆசுவாசப்படுத்திய நிலையில், பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பழைய நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து தற்போது, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் பிற்பகல் 1:15 மணிக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக