செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சீனா - நேபாளம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தியா பற்றி நேபாள பிரதமர் கூறியது என்ன?

சீனா இந்தியா நேபாளம்
 BBC News தமிழ் : சீனா - நேபாளம் இடையேயான ரயில்வே திட்டத்தை தனது பதவிக் காலத்தில் தொடங்க முடியும் என்று பிரசந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், செப்டம்பர் 23 ஆம் தேதி, தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார்.செப்டம்பர் 30 வரை பிரசந்தாவின் சீனப் பயணம் தொடரும்.
நேபாளத்தின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரசந்தா சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
முன்னதாக அவர் இந்த ஆண்டு மே 31 முதல் ஜூன் 3 வரை இந்தியா வந்திருந்தார்.
கடந்த 2008 இல் நேபாளத்தில் முடியாட்சி முடிவுக்கு வந்த பிறகு, பிரசந்தா முதல்முறையாக நேபாளத்தின் பிரதமரானார். அவரது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவாக இருந்தது.
பிரசந்தாவுக்கு முன், முடியாட்சி முறையில் யார் பிரதமரானாலும், பாரம்பரியமாக அவர்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால் பிரசந்தா இந்த மரபை உடைத்தார்.

சீனாவின் புரட்சித் தலைவரான மாவோ சேதுங்கை தமது ஆதர்ச நாயகனாக அவர் கருதுகிறார்.
சீனா -நேபாளம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன?
பிரசந்தாவின் இந்த பயணத்தின்போது சீனா மற்றும் நேபாளம் இடையே செப்டம்பர் 25 அன்று பல்வேறு துறைகள் சார்ந்த 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்ற நேபாள -சீன வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது அவர், “நான் சீனாவுக்கு வரும் போதெல்லாம், இங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. உள்கட்டமைப்பு முதல் மனித வள மேம்பாடு, வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ சேவைகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் இந்த மாற்றங்கள் தெளிவாகத் தெரிகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று பிரசந்தா பேசியிருந்தார்.

பிரசந்தாவின் இந்த பயணத்தின்போது சீனா மற்றும் நேபாளம் இடையே செப்டம்பர் 25 அன்று பல்வேறு துறைகள் சார்ந்த 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தலைநகர் பெய்ஜிங்கில் கையெழுத்தான இந்த 12 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் உள்ளன.

விவசாயம், வர்த்தகம், உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சில நிறுவன சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன..

இந்த ஒப்பந்தங்களில் நேபாளம் மற்றும் சீனா இடையே சாலை இணைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும்.

நேபாளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை விரிவாக மதிப்பாய்வு செய்துள்ளதோடு, சீனா- நேபாளம் இடையே நிலவும் உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளன.

பிடிஐ முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, உலகளாவிய புதிய பாதுகாப்பு கொள்கை (GSI) மற்றும் உலகளாவிய நாகரிகம் (GCI) தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நேபாளம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீன தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் நேபாள பிரதமர் பிரசந்தா அதை தவிர்ப்பது போல் தோன்றியது.

இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்:

    நேபாளத்தின் திட்டக் குழுவிற்கும் சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
    டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம்
    பசுமை மற்றும் குறைந்த கார்பன் வெளியீட்டை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம்
    விவசாயம், மீன்பிடி தொடர்பான ஒப்பந்தம்
    சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே வர்த்தகம் மற்றும் கட்டண ஒப்பந்தத்தை மேம்படுத்துவது தொடர்பான கூட்டு தொழில்நுட்ப பணிக்குழு ஒப்பந்தம்
    ஹில்சா சிம்கோட் சாலை திட்டம் மற்றும் நேபாளம் - சீனா பவர் கிரிட் இணைப்பு திட்டம் தொடர்பான ஒப்பந்தம்

சீனா செல்வதற்கு முன் பிரசந்தா என்ன கூறினார்?


நேபாளத்தின் இறையாண்மை, வளர்ச்சி மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று பிரசந்தாவிடம், சீன பிரதமர் லீ சியாங் உறுதியளித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவுக்குச் செல்வதற்கு முன், நேபாளத்தின் பிரபல இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்னிக் காந்திபூருக்கு’ அந்நாட்டின் பிரதமர் பிரசந்தா பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பாதுகாப்பு தொடர்பான குழுவில் இணைவதற்கான வாய்ப்பை பிரசந்தா மறுத்திருந்தார்.

ஆனால் அதேநேரம், “உலகளாவிய புதிய பாதுகாப்பு கொள்கை மற்றும் உலகளாவிய நாகரிகம் (GDI) தொடர்பாக சீனா முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதில் சேர எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை,” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், "பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்குள் நாங்கள் நுழைய முடியாது," என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அணிசேரா வெளியுறவுக் கொள்கையை நேபாளம் பின்பற்றுகிறது. யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்பதே எங்கள் கொள்கை.

அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் நேபாளம் இல்லை என்றால், வேறு எந்த திட்டத்திலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று பிரசந்தா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், லீ சியாங் மற்றும் பிரசந்தா இடையேயான சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் GSI, GDI மற்றும் GCI போன்ற பிரச்னைகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காத்மாண்டு போஸ்ட்டில் வெளியான செய்தியின்படி, சீனா - நேபாளம் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில், பெல்ட் அண்ட் ரோடு (BRI) முன்முயற்சி குறித்த எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நேபாள பிரதமரின் சீன பயணத்துக்கு முன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக சீனாவின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

அதேநேரம், நேபாளத்தின் இறையாண்மை, வளர்ச்சி மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று பிரசந்தாவிடம், சீன பிரதமர் லீ சியாங் உறுதியளித்துள்ளார்.

"சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் என உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நேபாளத்திற்கு உதவ சீனா தயாராக உள்ளது" என்று சீனப் பிரதமர், நேபாள பிரதமருக்கு உறுதி அளித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளன.

பொக்காரா சர்வதேச விமான நிலையம் சீன நிறுவனமான CAMCE உதவியுடன் கட்டப்பட்டது. இந்த திட்டம் ஜூலை 2017 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக சீனா நேபாளத்திற்கு கடன் வழங்கியது.

இந்தியா - சீனா உறவை நேபாளம் எப்படி எதிர்கொள்ளும்?

கடந்த 1962இல் நடைபெற்ற இந்தியா - சீனா போரின்போது நேபாளம் நடுநிலை வகித்தது.

தனது ஒரு வார சீன பயணத்தில், அந்நாட்டின் பிரபல ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழுக்கு நேபாள பிரதமர் பிரசந்தா பேட்டியளித்தார்.

இந்த பேட்டியில் இந்தியா - சீனா உறவுகள் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இந்தியா-சீனா இடையேயான உறவைக் கருத்தில் கொண்டு நேபாளம் அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று பலர் கவலை தெரிவிக்கின்றனர் என்றும் பிரசந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “இந்தியா மற்றும் சீனாவுடனான நேபாளத்தின் உறவுகள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலானது. அண்டை நாடுகளுடன் அமைதியான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளுடனும் நேபாளம் சுதந்திரமான உறவைப் பேணி வருகிறது,” என்று பிரசந்தா பதிலளித்தார்.

“ஒரு நாட்டுடனான நேபாளத்தின் உறவு மற்றொரு நாட்டை பாதிக்காது. நேபாளத்தின் நெருங்கிய நண்பர்களாக திகழும் இந்தியா மற்றும் சீனா, எங்களது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

எனவே இரு நாடுகளுடனும் உறவுகளை தொடர்வோம். எந்தவொரு நாட்டுடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் அவற்றைத் தீர்ப்போம்” என்றும் பிரசந்தா கூறினார்.

கடந்த 1962இல் நடைபெற்ற இந்தியா - சீனா போரின்போது நேபாளம் நடுநிலை வகித்தது. யாருடைய பக்கமும் செல்ல மறுத்துவிட்டது.

பிரசந்தா மேலும் கூறுகையில், “நேபாளத்துக்கும், இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவுகள் தெளிவாக உள்ளன. இரு நாடுகளுடனும் நல்ல நட்புறவை நாங்கள் விரும்புகிறோம். மேலும் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நட்புறவைக் காண விரும்புகிறோம்,”

“இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவுகள் நேபாளத்துக்கும் உதவும். இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தவும், நெருக்கத்தை அதிகரிக்கவும் தனிப்பட்ட முறையில் நான் உறுதி பூண்டுள்ளேன்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் நலன்களையும் நேபாளம் மதிக்கிறது. மூன்று நாடுகளுக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றும் குளோபல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் நேபாள பிரதமர் பிரசந்தா கூறியுள்ளார்.

சீனா - நேபாளம் ரயில் திட்டம் குறித்து பிரசந்தா என்ன சொன்னார்?

சீனா-நேபாளம் இடையேயான ரயில் திட்டத்தை உங்கள் பதவிக் காலத்தில் தொடங்குவீர்களா? என்று பிரசந்தாவிடம் குளோபல் டைம்ஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அவர், “சீனா - நேபாளம் இடையேயான ரயில் திட்டத்தின் மீது நேபாள மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.

இந்தத் திட்டம் நிறைவடைந்தால், நேபாளத்தின் போக்குவரத்துக்கான சிறந்த வாய்ப்பாக அது அமையும். அத்துடன் அதன் மூலம் நாட்டின் வர்த்தகமும் விரிவுப்படுத்தப்படும்” என்று பிரசந்தா பதிலளித்தார்.

ஆனால், இந்த திட்டம் தொடர்பான மிக முக்கியமான கவலை என்னவென்றால், இதனை எவ்வளவு விரைவில் தொடங்க முடியும் என்பதுதான்.

இந்தத் திட்டத்திற்கு நிறைய நிதி ஆதாரங்கள் தேவைப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சுமையை நேபாளம் மட்டும் தாங்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியில் இருந்து வரும் நிதியை நம்பி இருக்க வேண்டியுள்ளது என்றும் நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி குறித்து பிரசந்தா கூறும்போது, “இந்தத் திட்டத்துக்கான கடனின் விதிமுறைகள் நேபாளப் பொருளாதாரத்தை ஆதரிக்க போதுமானதாக இருக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும். எனது பதவிக் காலத்தில் இத்திட்டத்தைத் தொடங்க முடியும் என்று நம்புகிறேன். சீனா மற்றும் நேபாளத்தின் கனவுகளை ரயில்வே மூலம் இணைக்க முடியும் என்பதே இதில் முக்கிய விஷயம்” என்று அவர் பதிலளித்தார்.

நேபாள பிரதமரின் சீனப் பயணம் - நிபுணர்களின் கருத்து என்ன?

சீனா இந்தியா நேபாளம்

நேபாள பிரதமரின் இந்தப் பயணம் சம்பிரதாயமான ஒன்று என்று சீனாவுக்கான நேபாள தூதராக இருந்த மகேந்திர பகதூர் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

நேபாளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், நேபாளம் மற்றும் சீனா இடையே கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. இரு நாடுகளின் கூட்டு அறிக்கை தொடர்பாக இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, நேபாள பிரதமர் பிரசந்தாவின் சீனப் பயணம் குறித்து, சீனாவுக்கான நேபாள தூதராக இருந்த மகேந்திர பகதூர் பாண்டே காத்மாண்டு போஸ்ட்டிடம் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேபாள பிரதமரின் இந்தப் பயணம் சம்பிரதாயமான ஒன்று என்பதை தவிர வேறொன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது,"நேபாள பிரதமரின் இந்தப் பணம், நாம் எவ்வளவு வெற்றுத்தனமாக இருக்கிறோம் என்பதையும், சீனா போன்ற வல்லரசை எவ்வாறு கையாள்வது என்பது நேபாளத்துக்குத் தெரியவில்லை என்பதையும் காட்டுகிறது." என்று பாண்டே விமர்சித்துள்ளார்.

சீனாவின் முன் நேபாளத்தை எப்படி முன்னிறுத்துவது என்பது குறித்த எந்த திட்டத்தையோ, உத்தியையோ நான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“சீனா - நேபாளம் இடையே இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒரு சம்பிரதாயமான வெளிப்பாடு என்பதை தவிர வேறில்லை. இந்த சுற்றுப்பயணத்திற்கு நேபாளம் தயாராகவில்லை.

சீனாவுடன் நேபாளம் எந்தெந்த விஷயத்தில் ஒத்துழைக்க முடியும்? கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் என்னவானது? என்றும் மகேந்திர பகதூர் பாண்டே கேள்வியெழுப்பி உள்ளார்.

நேபாள பிரதமரின் சீனப் பயணம் குறித்து, தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவரான கணேஷ் அதிகாரியும், காத்மாண்டு போஸ்ட்டிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

“புவிசார்அரசியல் நலன்களைப் பின்தொடர்வதில் நேபாளம் கடினமான நேரத்தைச் சந்தித்து வருகிறது. அரசியல் சாசனத்தைப் பின்பற்றி அணிசேரா வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்த போராடி வருகிறது.

“மாறிவரும் உலகத்திற்கேற்ப நேபாளம் வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அது ஏட்டளவில் மட்டுமின்றி செயல் அளவிலும் இருக்க வேண்டும்” என்று கணேஷ் அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “தூதரகத் திறனை வலுப்படுத்தாவிட்டால் நேபாளத்தை யாரும் நம்பமாட்டார்கள். அனைவரையும் திருப்திபடுத்த முடியாது என்பதை நேபாள தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேபாளத்தின் வெளியுறவுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் இந்த குழப்ப நிலை, பிரதமர் பிரசந்தாவின் சீனப் பயணத்தின் போது தெளிவாகத் தெரிகிறது” என்று கணேஷ் அதிகாரி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக