செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

ஹரியானா - : முஸ்லிம்களின் கட்டடங்களை இடிக்கும் 'அரசாங்க புல்டோசர்கள்' - கள நிலவரம்

BBC  தில்நவாஸ் பாஷா  பிபிசி நியூஸ்  ;; ஹரியானா வன்முறை: முஸ்லிம்களின் கட்டடங்களை இடிக்கும் 'அரசாங்க புல்டோசர்கள்' - கள நிலவரம்
பத்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளித்து வந்த முடிதிருத்தும் கடையை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டதாக சமன்லால் கூறினார்
கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதியன்று, பஜ்ரங்தள் அமைப்பு ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் ஒரு மத யாத்திரைக்கு ஏற்பாடு செய்தது.
இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள தொண்டர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நூஹ் நகரில் உள்ள கோவிலில் இருந்து யாத்திரை சென்றபோது, ​​சிறிது நேரத்தில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் தொடங்கின.
நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
கோவிலுக்குள் ஏராளமானோர் சிக்கியிருந்த நிலையில், காவல்துறை உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.
நூஹ் நகரிலிருந்து தொடங்கிய வன்முறைக்குப் பிறகு உருவான பதற்றம், அதே நாள் மாலையில் ஹரியானாவில் சோஹ்னா மற்றும் குருகிராம் போன்ற பகுதிகளிலும் தொற்றிக்கொண்டது.

வன்முறையில் இதுவரை 2 ஊர்க்காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுவரை 56 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.வன்முறை நடந்தபோது கற்கள் வீசப்பட்ட கட்டடங்களை, அவை விதிமீறிக் கட்டப்பட்டிருந்தால் புல்டோசர் மூலம் அழித்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குருகிராமில் வழக்கம் போல் நிலைமை கட்டுக்குள் இருக்கும் நிலையில், சோஹ்னாவை நோக்கி மேலும் நகர்ந்தால், அங்கே சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
நூஹ்வை அடைந்ததும் அங்கு அமைதி நிலவியது நன்றாகத் தெரிந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் ஆர்பிஎஃப், உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நூஹ் பேருந்து நிலையத்தின் முன் புல்டோசர்களின் சத்தம் அங்கே நிலவிய அமைதியைக் குலைத்தது. இங்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சாலையோரம் கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அனைத்தையும் நிர்வாகம் அகற்றியுள்ளது.

தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை அழிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, ​​அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், "இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு," என்று கூறினார்.

பக்கத்து கிராமத்தில் வசிக்கும் சமன்லால், தனது முடி வெட்டும் கடையை புல்டோசர் கொண்டு அகற்றியதை கண்ணீருடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து புல்டோசர் நகர்ந்து சென்ற பின்னர், சமன்லால் தனது முற்றிலும் உடைந்த கடையில் மீதமுள்ள பொருட்களை சேகரிக்கத் தொடங்கினார்.

"இந்தக் கடையை வட்டிக்குக் கடன் வாங்கி நான் நடத்தி வருகிறேன். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு பத்து பேர் கொண்ட குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. கடையை இழந்ததன் காரணமாக நாங்கள் ரோட்டிற்கு வந்துவிட்டோம்.

இந்தக் கலவரத்தில் எங்கள் பங்கு என்ன என்பதற்காக இந்தத் தண்டனை எங்களுக்குக் கிடைத்துள்ளது?" என்று கேள்வி எழுப்பினார் சமன்லால்.

ஆனால், சட்டவிரோத கட்டுமானங்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக நூஹ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நூஹ் மாவட்ட ஆட்சியர் திரேந்திர கத்கதா கூறுகையில், "காவல்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோதமான கட்டுமானங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன," என்றார்.

இந்த நடவடிக்கை தொடரும் என்று திரேந்திரன் கூறுகிறார்.

மறுபுறம், நூஹ் மாவட்ட திட்ட அதிகாரி வினேஷ் சிங் கூறுகையில், "கல்வீச்சு சம்பவம் நடந்த இடங்களில், எங்கிருந்து கற்கள் வீசப்பட்டனவோ, அந்த இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல் வீச்சில் ஈடுபட்டவர்களின் கட்டுமானங்கள் இடிக்கப்படுகின்றன," என்றார்.

வினேஷ் சிங் கூறுகையில், சனிக்கிழமையன்று இங்கு 45 முழுநேர கடைகள், பல தற்காலிக கடைகள் மற்றும் சில வீடுகள் இடிக்கப்பட்டன என்றார்.

படக்குறிப்பு,

பத்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளித்து வந்த முடிதிருத்தும் கடையை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டதாக சமன்லால் கூறினார்

"நாங்கள் அழிக்கப்படுகிறோம். அடுத்து என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை," என்றார் நூஹ் பேருந்து நிலையத்தின் முன் தண்ணீர், குளிர்பானங்கள் விற்று வந்த யூசுஃப் அலி.

நூஹ்வில் உள்ள மோர் மருத்துவக் கல்லூரி அருகே ஒரு மூன்று மாடி வீடு மற்றும் பள்ளி கட்டடத்தையும் புல்டோசர்கள் இடித்துத் தள்ளின.

இதுபற்றி வினேஷ் சிங் கூறியபோது, "இந்த கட்டடத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டன. அத்தகைய கட்டடங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன," என்றார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகர்க்கப்பட்ட கட்டடத்தில் ஒரு உணவு விடுதியும் செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளனர். கட்டட உரிமையாளரின் இளைய சகோதரரான சர்ஃபராஸ் பிபிசியிடம் பேசியபோது, " கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் அளிக்கப்படவில்லை. 2016இல் கட்டட விதிமீறல் குறித்து எங்களுக்கு ஒருமுறை நோட்டீஸ் வந்தது. அதன்பிறகு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அபராதம் செலுத்தினோம். அதன்பிறகு எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது," என்றார்.

சர்ஃபராஸ் மேலும் பேசியபோது, "இந்த கட்டடத்தை வாடகைக்குக் கொடுத்துள்ளோம். இங்கு உணவகம் நடத்தி வரும் ஜாவேத், கல் வீச்சுக்காரர்களை கட்டடத்தின் மீது ஏறவிடாமல் தடுத்ததாக எங்களிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த வன்முறைக் கும்பல் அவரை மீறி கட்டடத்தின் மீது ஏறி கல்வீச்சில் ஈடுபட்டது," என்றார்.

"எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், நிர்வாகத்தின் இதுபோன்ற செய்கையைச் சரியானது எனக் கருதலாம். ஆனால் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.

யாரோ சிலர் இந்த கட்டடத்தின் மீது ஏறி கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? நிர்வாகம் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்து எங்கள் கட்டடத்தை இடித்துள்ளது," என்று அவர் கூறினார்.

எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், நிர்வாகத்தின் இந்த கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவார்களா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க சற்றுத் தயங்கிய சர்ஃபராஸ், "காவல்துறை, நிர்வாகம், நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைத்தான் எடுக்கிறார்கள். இதில் ஏதாவது நம்பிக்கை இருந்திருந்தால், நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருக்கலாம். ஆனால் இந்த மோசமான சூழ்நிலையில் நாங்கள் எங்கே போவது? எங்கள் பேச்சை யார் கேட்பார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

நல்ஹர் மருத்துவக் கல்லூரிக்கு வெளியே உள்ள சந்தை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 45 கடைகள் இருந்தன. இவையனைத்தும் சனிக்கிழமை காலையிலேயே இடிக்கப்பட்டன. தற்போது இங்கு எஞ்சியுள்ள குப்பைகளில் இருந்து மக்கள் தங்கள் உடைமைகளைத் தேடி வருகின்றனர்.

முசைப் என்ற 20 வயது நபர் இங்கு ஹைப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவருடைய விற்பனையகமும் இடிக்கப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் அவர் தெரிந்துகொண்டார்.

அவர் இங்கு வருவதற்குள், அவரது கடை முற்றிலும் தகர்க்கப்பட்டு சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

"எனது தந்தை தனது சேமிப்பை முதலீடு செய்து இந்தக் கடையை உருவாக்க எனக்கு உதவினார். இந்தக் கடை மூலம் மாதம் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இப்போது அனைத்தும் நாசமாகிவிட்டன," என்று முசைப் வேதனை தெரிவித்தார்.

"ஜூலை 31ஆம் தேதி அந்த யாத்திரை இங்கு வருவதற்கு முன்பாகவே, நாங்கள் கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டோம். இங்கு எந்த வன்முறையும் இல்லை. இருப்பினும், நிர்வாகம் இந்த சந்தையை இடித்துவிட்டது," என்று முசைப் கூறினார்.

அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறும் முசைப்பின் கண்களில் கண்ணீரும், மனதில் கோபமும் தெரிகிறது.

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசிய அவர், "இந்தக் கடையைத் திறப்பதற்காக நான் என் படிப்பை விட்டுவிட்டு வந்தேன். இப்போது எல்லாம் நாசமாகிவிட்டது, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை," என்றார்.

இடிக்கப்பட்ட தனது கடையில் மிச்சமிருக்கும் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார் முசைப்

ஹதினில் வசிக்கும் ஹர்கேஷ் ஷர்மா என்பவர், நூஹ் நகரில் ஹாரி ஜெர்ரிஸ் பீசாவின் கிளையைத் தொடங்கி அதை நடத்தி வந்தார். அவரது அந்த உணவகம் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது.

தற்போது மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள இந்த உணவகத்தை நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துள்ளது.

ஹர்கேஷ் ஷர்மா கூறுகையில், "இந்த கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறி, புல்டோசர் மூலம் அரசு இடித்துத் தள்ளியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை," என்றார்.

"முறையாக முன்னறிவிப்பு வழங்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் எனது உடைமைகளையாவது இங்கிருந்து நான் எடுத்துச் சென்றிருப்பேன். இந்த கட்டடம் சட்டத்திற்குப் புறம்பானது என்றால், இங்கு ஒரு மின் மீட்டரை பொருத்த அரசு எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது? இந்த கட்டடத்தின் மீது வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தியதை அரசு எப்படி ஏற்றுக்கொண்டது?"

இந்த வகுப்புவாத வன்முறையில் ஹர்கேஷ் ஷர்மாவுக்கு இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பாதிப்புகளைக் கடந்து, "கலவரக்காரர்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்டவர்களையோ அல்லது கல் வீசியவர்களையோ மட்டும் அரசு தண்டித்திருந்தால், அரசு சரியாகச் செயல்படுகிறது என்று நாம் கருத முடியும். ஆனால், இங்கே அரசு எதையும் சரிபார்க்காமல் அனைத்தையும் நாசமாக்கியுள்ளது," என்றார் அவர்.
படக்குறிப்பு,

குறைந்தது முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் தமது பொருட்களை முன்கூட்டியே எடுத்துச் சென்றிருக்க முடியும் என்கிறார் உணவக உரிமையாளர் ஹர்கேஷ் ஷர்மா.

'இங்கு கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கறிஞர் கான் என்பவர் தனது அலுவலகத்தை நடத்தி வருகிறார். கட்டட இடிப்பு குறித்து ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டு இங்கு அவர் வந்து பார்த்தபோது, அவரது அலுவலகமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.

அந்த இடிபாடுகளின் மீது வேதனையுடன் நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர் கான், "எங்களுக்கு அவகாசம் கொடுத்திருந்தால், எங்களது பொருட்களை அகற்றியிருப்போம். நாங்கள் வாடகைக்குத்தான் இந்த கட்டடத்தைப் பயன்படுத்தி வந்தோம். இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்.

வழக்கறிஞர் கான் பேசியபோது, ​​"எனக்கு பெரிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூடக் கருதமுடியாது. ஆனால் இங்கிருந்த 6 மருந்து கடைகளும் இடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருந்தன.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மையம் ஒன்றும் இடிக்கப்பட்டது. அதில் விலை உயர்ந்த இயந்திரங்கள்கூட இருந்தன. இதேபோல் ஒரு எக்ஸ்ரே மையமும் இடிக்கப்பட்டது. அங்கே இருந்த ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் உடைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் யாருக்கும் எந்த கால அவகாசமும் கொடுக்கவில்லை," என்றார்.

மருத்துவக் கல்லூரிக்கு வெளியே இடிக்கப்பட்ட கடைகள் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்று நிர்வாகம் கூறுகிறது.

மாவட்ட ஆட்சியர் திரேந்திர கர்கடா கூறுகையில், "இது வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானம். இந்த கட்டட உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே போதுமான முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

வழக்கறிஞர் கானின் கட்டடமும் மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
அதே நேரம், இங்கு இடிக்கப்பட்ட பதினைந்து கடைகளின் உரிமையாளர்களான முகமது சவுதி மற்றும் அவரது தம்பி நவாப் ஷேக் ஆகியோர், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களும் வன்முறைகளைக் காரணம் காட்டி இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

"இன்று காலை எட்டு மணிக்கு கடைகள் இடிக்கப்பட்டன. எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இவை எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கடைகள். நிர்வாகம் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு, இந்தக் கடைகளை இடித்துள்ளது," என்றார் முகமது சவுதி.

சவுதி பேசியபோது, ​​"எங்களிடம் சொத்து குறித்த உரிய ஆவணங்கள் உள்ளன. இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே அரசுக்குத் தடை விதித்திருந்தன.

ஆனால், தற்போது வன்முறை என்ற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிர்வாகம் எங்கள் கடைகளை இடித்துள்ளது. சொத்து ஆவணங்களை காட்டக்கூட எங்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை," என்றார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக சவுதி தெரிவித்துள்ளார். சவுதியின் இளைய சகோதரர் நவாப் ஷேக் தனது கடைகள் இடிக்கப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நவாப் ஷேக் திணறிய குரலில் கூறினார், "கலவரத்தின்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு இல்லை. அரசாங்கம் எங்களை அழித்துவிட்டது. கட்டடங்களை இடித்த நபர்களைத் தடுக்க நான் முயன்றபோது, ​​காவல்துறை என்னை இங்கிருந்து இழுத்துச் சென்றது. இதை வைத்து தான் நாங்களும், எங்கள் குழந்தைகளும் வாழ்க்கையை நடத்தி வந்தோம். இப்போது நாங்கள் எங்கு செல்வது?"

ஷேக் தொடர்ந்து கூறுகையில், "எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம். பொது மக்களுக்கு அரசு நல்லது செய்யவேண்டும். ஆனால் இங்கே அரசு எங்களை அழிக்கிறது.

இந்த அரசு எங்களை அழித்துவிட்டது. இதனால் எங்கள் வீட்டில் துயரம் பீடித்துள்ளது. நாங்கள் இனி சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? இந்தக் கடைகளை மீண்டும் கட்டுவதற்கு எங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?" என்று கேட்கிறார்.

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடைந்து கிடக்கும் கடைகளைப் பார்க்க நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். அசோக்குமார் தனது நண்பர்கள் சிலருடன் இங்கு வந்திருந்தார்.

புல்டோசர்களின் கட்டட இடிப்புக்கு ஆதரவு தெரிவித்த அசோக் குமார், "அரசு செய்தது முற்றிலும் சரி. இந்த கலவரக்காரர்களுக்கு இதுபோன்ற பாடம் கற்பிக்கப்படுவதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், "இதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்துக்களுக்கு சொந்தமான எந்த சொத்துகளும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்கள் வாடகைக்கு இருந்த கட்டடங்கள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டன," என்றார்.

நூஹ் - நல்ஹார் இணைப்பு சாலையில் வகுப்புவாத வன்முறை நடந்துள்ளது. மேலும் இந்த சாலையில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நிர்வாகம் கட்டடங்களை இடித்து வருகிறது.

இந்த சாலையில் 100% நிலையான சொத்துகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. இந்த கட்டடங்களில் இந்துக்களும் வாடகைக்கு வியாபாரம் செய்து வந்தனர்.

அசோக்குமாருடன் வந்த பிரமோத் கோயல், "இதுவரை இதுபோல் ஒரு கலவரம் நடந்ததே இல்லை. அப்படி இதுவரை நடக்காத கலவரம் தற்போது நடந்துள்ளது. அது ஒரு திட்டமிட்ட கலவரம் என்பதே உண்மை. விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளை மட்டுமே நிர்வாகம் இடித்துள்ளது. நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி," என்றார்.

ஞாயிற்றுக்கிழமையும் நூஹ் நகரில் புல்டோசர் மூலம் கட்டட இடிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் திரேந்திர கர்கடா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக