திங்கள், 7 ஆகஸ்ட், 2023

இன்று காலை அவசரமாக கார்கே அலுவலகத்தில் கூடும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்.. ராஜ்ய சபா வியூகம்

tamil.oneindia.com  - Vignesh Selvaraj : டெல்லி: 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் கூடி முக்கிய வியூகம் வகுக்க உள்ளனர்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி உயரதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல் ஆகியவை தொடர்பான அதிகாரத்தை மீண்டும் ஆளுநரிடமே வழங்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. நாடாளுமன்ற மக்களவையில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றிவிட வாய்ப்பு இருப்பதால், மாநிலங்களவையில் அந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தார் கெஜ்ரிவால்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், டெல்லி அரசுக்கு எதிரான பாஜகவின் மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை விதித்தது ஆம் ஆத்மி. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து, பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது என காங்கிரஸ் முடிவெடுத்தது. அதன்படி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தன.

எனினும், குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் எளிதாக நிறைவேற்றி விட்டது. இனி இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பலம் இருப்பதால், இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி நிர்வாக திருத்தம் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று (ஆகஸ்ட் 7) தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய், டெல்லியின் உரிமைகளை வலுக்கட்டாயமாக பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தனது எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மிக முக்கியமான விஷயங்கள் ஆகஸ்ட் 7, 2023 திங்கள் அன்று ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே ராஜ்யசபாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11:00 மணி முதல் சபை ஒத்திவைக்கப்படும் வரை தவறாமல் சபையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 'மோடி குடும்பப்பெயர்' குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) தலைவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் கூடி அவை நடவடிக்கை தொடர்பான வியூகத்தை வகுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசுக்கு எதிரான பாஜகவின் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய உள்ளார் என்பதால், இந்த மசோதாவை முறியடிப்பது தொடர்பாக 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் ஆலோசனை நடத்தி வியூகங்களை வகுப்பார்கள் எனத் தெரிகிறது. இதனால் இன்று நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக