Thaainaadu – தாய்நாடு : மத்தள விமான நிலையத்தால் பல்லாயிரம் கோடி நட்டம்
2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலப்பகுதியில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபாய் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2,221 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செயற்பட ஆரம்பித்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையான 05 வருடங்களில் ஏற்பட்ட மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடிகள் என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் தணிக்கை காட்டுகிறது.
மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்திய நட்டம் 2,221 கோடி ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மத்தள சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கடந்த வருடம் 11,577 விமானப் பயணிகளே விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ள அதேவேளை, கடந்த 2017 முதல் 2022 வரையான 5 வருடங்களில் 103,324 பயணிகளே விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 3,656 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அதற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் தொகை 1,900 கோடி ரூபாவாகும்.
எவ்வாறாயினும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் பெற்ற வெளிநாட்டு கடனுக்காக 2022 ஆம் ஆண்டு 184 கோடி ரூபா கடன் தவணை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக செயற்படுத்துவது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமே தவிர விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி சிவில் விமான சேவைகளுக்காக திறக்கப்பட்டதுடன் கடந்த 5 வருடங்களில் விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்காக 8.6 கோடி ரூபா செலவிடப்பட்ட போதிலும் எந்தவித வருமானம் ஈட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக