புதன், 16 ஆகஸ்ட், 2023

மதிவதனியும் மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளனர்! அக்கா சாரதா பேட்டி

மாலை மலர்  : இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
இருப்பினும் தமிழ் ஈழ ஆர்வலர்கள் பிரபாகரன் போரில் கொல்லப்படவில்லை என்றும், அவர் தற்போது வரை உயிருடன் இருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபாகரனோடு போரில் கொல்லப்பட்டு விட்டதாக கருதப்படும் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை மதிவதனி அக்கா வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-வணக்கம், நான் சாரதா  ஹரித்தரன், தந்தையின் பெயர் ஏரம்பு, தாயாரின் பெயர் சின்னம்மா. நாங்கள் ப புங்குடு தீவை க கொண்டவர்கள். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனியும், அவரது மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறி மற்றும் ஊடகத்துறையினரால் செய்திகளை அறிந்து கொண்டேன்.

கடந்த சில ஆண்டு காலங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியை அறிந்து கொண்டும், பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவறிந்து விட்டுதான் வந்துள்ளேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கிறேன். உண்மையிலேயே இந்த செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு மதிவதனியின் அக்கா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஈழ ஆதரவு தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில் இந்த வீடியோ திரும்ப திரும்ப தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த தகவல் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவே தமிழ் ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மதிவதனியின் அக்கா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோவில் பிரபாகரன் பற்றியோ, அவரது மகன் பாலச்சந்திரன் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. தனது தங்கை மதிவதனி, அவரது மகள் துவாரகா இருவரையும் மட்டுமே சந்தித்து பேசி இருப்பதாக அவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த சந்திப்பு எங்கு வைத்து நடந்தது? என்பது பற்றிய தகவலையும் அவர் வெளியிடவில்லை. சந்திப்பின் போது வேறு என்ன விசயங்கள் பேசிக்கொள்ளப்பட்டன என்பது பற்றிய தகவலையும் மதிவதனியின் அக்கா தனது வீடியோவில் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக