புதன், 2 ஆகஸ்ட், 2023

ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த அமெரிக்க வாழ் இந்திய இன்ஜினியர்

AI recreation

தினமலர் : வாஷிங்டன் : உயிரிழக்கும் நிலையில் இருந்த உறவினரிடம், 'வீடியோ' அழைப்பில் ஹிந்தியில் பேசியதால், அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றும் இந்திய வம்சாவளி அனில் வர்ஷனே, 78, தன் வேலையை இழந்துள்ளார். இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள 'பார்சன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தில் மூத்த இன்ஜினியராக பணியாற்றி வந்தவர், அனில் வர்ஷனே. கடந்த 1968ல் அமெரிக்காவுக்குச் சென்ற அவர்,


அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். இவருடைய மனைவி சாஷி, நாசாவில் 1989ல் இருந்து பணியாற்றி வருகிறார்.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் மருத்துவமனையில் உயிரிழக்கும் நிலையில் இருந்த உறவினர் ஒருவர், வீடியோ அழைப்பின் வாயிலாக வர்ஷனேயை அழைத்துள்ளார்.

அலுவலகத்தில் தன் இடத்தில் இருந்த வர்ஷனே, அவருடன் இரண்டு நிமிடங்கள் பேசியுள்ளார். இருவரும் ஹிந்தியில் பேசியுள்ளனர்.

இது குறித்து சக ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். அதன்படி, நிறுவனத்தின் ரகசியங்களை, யாருக்கும் தெரியாத மொழியில் வெளியிட்டதாக, கடந்தாண்டு அக்டோபரில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

தன் தரப்பை கேட்காமல், தன் நீண்ட கால சிறப்பான, நேர்மையான பணியை கவனத்தில் கொள்ளாமல், நிறுவனம் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன்னை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக, அலபாமா நீதிமன்றத்தில் வர்ஷனே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக