புதன், 23 ஆகஸ்ட், 2023

லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் திடீர் ராஜினாமா?

தினமலர் : அமைச்சர் நேருவுக்கு எதிராக, 5 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கிய விவகாரத்தில், லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய தகவல், அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும், நேரு தரப்பில் சிலர் கவனித்து வருகின்றனர். அதனால், நேருவுக்கு எதிராக, துறையூர், முசிறி, லால்குடி, மணச்சநல்லுார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.


மனக்குமுறல்
சுதந்திர தினத்தை ஒட்டி, லால்குடி தொகுதியில், அரசு திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை, நேரு துவக்கி வைத்தார். அத்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன் புறக்கணித்தார்.

அதைத் தொடர்ந்து, தன் மனக்குமுறலை ஒரு நீண்ட கடிதமாக, முதல்வருக்கு எழுதி அனுப்பியுள்ளார். அதில், தன் தொகுதியில் நிறைவேற்றிய, நிறைவேற்றப்பட உள்ள 'டெண்டர்' பணிகளின் கமிஷன் விவகாரத்தையும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனங்கள் பெயர் மற்றும் தொகை விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேரு மகன் அருண் மற்றும் திருச்சி அறிவாலயத்தில் கோலோச்சும் கவி ஆகியோரின் செயல்பாடுகளையும் புகாராக தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களை நேரு ஏமாற்றியது, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வது, இடைத்தேர்தல் நடக்கும் என மிரட்டுவது போன்ற விஷயங்களையும், விரிவாக எழுதியுள்ளார்.

உத்தரவு
இனி தனக்கு எம்.எல்.ஏ., பதவி வேண்டாம் என்றும், இதையே ராஜினாமா கடிதமாக எடுத்துக் கொள்ளுமாறும், அந்த கடிதத்தில் சவுந்தர பாண்டியன் விரக்தியை கொட்டியுள்ளார்.

அக்கடிதத்தை படித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அதிர்ச்சி அடைந்தனர். நேருவை அழைத்து, எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நேரு, அவசர அவசரமாக திருச்சி சென்றார். நேற்று காலையில், திருச்சி அறிவாலயத்தில் அதிருப்தியில் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து பேசினார்.

பின், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து, 'எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகிற பணிகளை செய்து கொடுங்கள்; இனி வரும் டெண்டர்களை அவர்களுக்கே கொடுங்கள். இனிமேல் எனக்கும் டெண்டருக்கும் சம்பந்தம் இல்லை' எனக் கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

அ.தி.மு.க.,வில் ஐக்கியம்?
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு தன்னை பரிந்துரைக்கும்படி, மாவட்ட செயலர் மதுரா செந்திலிடம், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், மதுரா செந்தில், தன் உறவினருக்கு அப்பதவி கிடைக்க செய்துள்ளார். பின், குமாரபாளையம் நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து, தனக்கு நகர செயலர் பதவி தரும்படி, விஜயக்கண்ணன் கேட்டுள்ளார். அதற்கும் மாவட்ட செயலர் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி அடைந்த விஜயகண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட, ஏழு கவுன்சிலர்கள், விரைவில் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைய முடிவு செய்துள்ளனர்.இத்தகவல் தி.மு.க., மேலிடத்திற்கு தெரியவந்ததும், அறிவாலயத்தில் பஞ்சாயத்துக்கு நடத்தி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.இதற்கிடையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ஆலாம்பாளையம் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரும், மாவட்ட செயலர் மீது அதிருப்தி அடைந்து, அ.தி.மு.க.,வில் இணைய தயாராகி உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக