வியாழன், 3 ஆகஸ்ட், 2023

இறங்கி வந்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்...நெகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி

மின்னம்பலம் - Selvam : மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வின் போது
அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை முதல்வர் ஸ்டாலின் தனது வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்து, அப்பகுதி பிரச்சினைகளையும் விசாரித்தார்.
முதல்வர் ஸ்டாலின்  சென்னை அசோக் நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று  (ஆகஸ்ட் 3) காலை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
 இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் போது   முதல்வர் தன்னை சந்தித்து  நலம் விசாரித்தது பற்றி  அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசுகையில்…


“தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டியது எங்களது கடமை. இதனால் என் வீட்டு வாசலில் நின்று  முதல்வர் வரும்போது  அவருக்கு வணக்கம் வைத்தேன்.

காரிலிருந்து இறங்கி வந்து,  ‘எப்படி இருக்கீங்க…நல்லா இருக்கீங்களா…இங்கதான் இருக்கீங்களா…ஏதாவது பிரச்சனை இருக்கா…?’ என்று கேட்டார். மழை பெய்தால் தண்ணீர் இந்த பகுதியில் தேங்குகிறது என்று தெரிவித்தேன். ’அதனால் தான் நானே நேரே வந்தேன். விரைவில் சரி செஞ்சிடுவாங்க’  என்று தெரிவித்தார். மக்களுடைய பிரச்சனைகளை இறங்கி வந்து கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக