மாலைமலர் : கோவை சூலூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார். அந்த ஜோடியின் திருமணம் இன்று நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் தொழில் அதிபர், தனது மகனிடம் தாடியை எடுத்து விடு, அதுதான் உனக்கு நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார். இதன்படி புதுமாப்பிள்ளை சலூனுக்கு புறப்பட்டார்.
அப்போது அவருக்கு மணமகளிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. உங்களுக்கு தாடி அழகாக உள்ளது. எனவே அதை எடுக்க வேண்டாம். டிரிம் செய்து கொள்ளுங்கள். அது போதும் என்று அறிவுரை கூறி உள்ளார்.
அவருக்கு மகன் தாடியுடன் இருந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், நான் சொன்ன பிறகும் ஏன் தாடியை எடுக்கவில்லை என்று சத்தம் போட்டார்.
அதற்கு புது மாப்பிள்ளை, மணமகளின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்ததாக தெரிவித்து உள்ளார். இது தந்தையை மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.
நான் தாடியை சேவிங் பண்ண சொன்னேன். ஆனால் நீ அந்த பெண்ணின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்து உள்ளாய். என்னை மதிக்க தவறி விட்டாய் என்று சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்து உள்ளார். இருந்தபோதிலும் தந்தை மனம் இரங்கவில்லை. வீட்டில் இருந்து மகனை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார்.
இதனால் புது மாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டு வாசலில் படுத்து கிடக்க நேரிட்டது. இந்த நிலையில் அவர் மணமகளுக்கு போன் போட்டு நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார். இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் தந்தையிடம் கூறி மணமகனின் தந்தையை சமாதானப்படுத்தும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். இதன்படி அவர் மணமகனின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அங்கு இருந்த தொழில் அதிபரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் அவர் சமரசம் ஆகவில்லை. எனவே மணமகளின் தந்தை புறப்பட்டு போய் விட்டார்.
இதற்கிடையே மணமகனின் தந்தை சமூகவலைதளத்தில், எனது மகனின் திருமணம் நின்று விட்டது. எனவே திருமண மண்டபத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது மணமகள் வீட்டாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
எனவே இன்று நடப்பதாக இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. இதற்கிடையே ஊர் பெரியவர்கள் மற்றும் இருதரப்பு உறவினர்கள் அனைவரும் மணமகனின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மணமகனின் தந்தை மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவாராம். அதனால் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும், முடியை நீளமாக வளர்க்கக் கூடாது என அறிவுறுத்துவாராம். அதையே அவரும் கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் அவரது மகனோ திருமண நிச்சயத்துக்கு பிறகு தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்து அவர் தனது மகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக