மாலைமலர் : மதுரை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் முழுவீச்சில் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பழமையான அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக்குன்றுகள் இருப்பது போன்ற முகப்பை திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அமைத்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருகை தரும் அ.தி.மு.க. தொண்டர்களின் பசியாற்றும் வகையில், புளிசாதம் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. 10 லட்சம் தொண்டர்களுக்கு வழங்கும் வகையில் உணவு தயார் செய்யப்படுகிறது.
இதற்காக 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் வழங்கப்பட உள்ளது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையலும் வழங்கப்படுகிறது.
இதில், புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் 4 திசைகளில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக