BBC : காலை உணவுத் திட்டம் - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி செய்தியாளர் :
அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
கே. தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன?
ப. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டமே, காலை உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது.
அதன் படி இந்தத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டது. முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள், சில தொலைதூரக் கிராமங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவைப் பெறுவார்கள் என்கிறது தமிழ்நாடு அரசு. வெள்ளிக்கிழமையன்று இந்தத் திட்டத்தை திருக்குவளையில் துவக்கிவைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஒரு களஆய்வு நடத்தினோம். அதில், ரத்தசோகை அதிகமாக நிறைய மாணவர்கள்கிட்ட இருந்தது. ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு காலை உணவு வழங்கினால் அவர்களுக்கு கூடுதலாக சத்துகள் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதனால்தான், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வத்தோடும் அக்கறையோடும் நாங்கள் இறங்கினோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
கே. பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வரலாறு என்ன?
ப. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்திற்கென ஒரு நீண்ட வரலாறு உண்டு. முதன் முதலில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிக்கூடங்களில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் நீதிக் கட்சியின் தலைவராக சர். பிட்டி. தியாகராயர் இருந்தபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடிவுசெய்யப்பட்டது. அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தில் 165 மாணவர்கள் படித்துவந்தனர். ஒரு மாணவருக்கு ஒரு அணாவரை செலவழிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
பிறகு, மேலும் நான்கு பள்ளிக்கூடங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, இந்த ஐந்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. ஆனால், ஆரம்பக் கல்விக்கான நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்கு செல்வுசெய்வதை பிரிட்டிஷ் அரசு ஏற்கவில்லை. ஆகவே, 1925ஆம் ஆண்டுடன் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, சில பள்ளிகளில் மட்டும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
1956ல் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் சில பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்து அதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டார். ஆகவே, இந்தத் திட்டம் மாகாணத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி சுமார் 65 ஆயிரம் குழந்தைகளுக்கு வருடத்திற்கு சுமார் 200 நாட்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதற்காகும் செலவில் 60 சதவீதத்தை மாநில அரசும் மீதமுள்ள தொகையை உள்ளூர் மட்டத்தில் நன்கொடைகளாகப் பெற்றும் நிறைவேற்றப்பட்டது.
1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், கிராமப்புற பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 1984 செப்டம்பரில் இருந்து இந்தத் திட்டம் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டது.
1989ல் கலைஞர் முதலமைச்சரானபோது 15 நாட்களுக்கு ஒரு முறை மதிய உணவோடு அவித்த முட்டை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. 1998ல் இது வாரம் ஒரு முறை முட்டையாகவும் 2010ஆம் ஆண்டில் எல்லா நாட்களிலும் முட்டை வழங்கும் திட்டமாகவும் இது மாற்றப்பட்டது.
2014ஆம் ஆண்டில் வெறும் அவித்த முட்டை வழங்குவதற்குப் பதிலாக, மசாலா முட்டை வழங்கும் திட்டமாக இது மாற்றப்பட்டது. பலவகை கலவை சாதங்களும் மதிய உணவில் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசின் வழங்கும் புள்ளிவிவரங்களின்படி, 46,70,458 மாணவர்கள் தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் மதிய உணவைப் பெற்றுவருகின்றனர்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்தியா சென்னும் ஷான் த்ரேவும் இணைந்து எழுதிய An Uncertain Glory - India and its Contradictions நூலில் இந்த மதிய உணவுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "பொருளாதார அறிஞர்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆரம்பப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு அளிக்கும் சமூக நலத் திட்டங்கள் துணிச்சலுடன் துவங்கப்பட்டன, ஆரம்பப் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. தொடங்கப்பட்ட சமயத்தில் கவர்ச்சித் திட்டம் என விமர்சிக்கப்பட்டாலும் இதுவே பின்னர் தேசிய மதிய உணவுத் திட்டத்திற்கான முன்னோடியாக அமைந்தது" என்று குறிப்பிடுகின்றனர்.
கே. காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் தாக்கம் என்னவாக இருந்தது?
ப. இந்தக் காலை உணவுத் திட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்தியபோது நல்ல பலன் இருந்ததாகச் சொல்கிறார் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவரான டாக்டர் ஜெயரஞ்சன். "இந்தத் திட்டத்தை செயல்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் மற்ற பள்ளிக்கூடங்களைவிட வருகைப் பதிவு அதிகரித்திருக்கிறது. அதேபோல, அந்தப் பள்ளிக்கூடங்களிலேயே முன்பிருந்ததைவிட வருகைப் பதிவு சதவீதம் அதிகமாகியிருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்தத் திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது." என்கிறார்.
கே. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன பலன்களைப் பெற அரசு விரும்புகிறது?
ப. இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு, மூன்று குறிக்கோள்களை அடைய நினைக்கிறது அரசு. "இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்களின் செலவுச் சுமை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பெண்களின் வேலைச் சுமை குறையும் என எதிர்பார்க்கிறோம். குழந்தைகளின் காலை உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்பதால், பெண்களால் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகளிடமிருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும். அதேபோல, குழந்தைகள் பசியில்லாமல் பள்ளிக்கு வருவதால், பாடங்களைக் கவனிப்பது அதிகரிக்கும். இது அவர்களது எதிர்காலக் கல்விக்கு வெகுவாகப் பயனளிக்கும்" என்கிறார் ஜெயரஞ்சன்.
ஜெயரஞ்சன், துணைத் தலைவர், மாநிலத் திட்டக்குழு
கே. இந்தத் திட்டம் குறித்த விமர்சனங்கள் என்ன?
ப. இந்த காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் அளிக்காமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் அளிக்க வேண்டும் என்கிறார்கள் பள்ளிக் கல்வி சார்ந்து செயல்படும் ஆர்வலர்கள். அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் ஏழைக் குழந்தைகள்தான் படிக்கிறார்கள் என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
"பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்பட வேண்டும் என்பது ஒரு நீண்ட காலக் கோரிக்கை. இத்தனை ஆண்டு காலமாக உழைக்கும் மக்களின் குழந்தைகள் காலைச் சாப்பாடு சாப்பிடாமல்தான் பள்ளிக்கு வந்தார்கள். அந்தப் பின்னணியில் இது ஒரு மிகச் சிறப்பான திட்டம். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் மூலம் முதலில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவந்தது. இப்போது அரசே இதனைச் செய்கிறது.
ஒரு குழந்தை பசியோடு பாடங்களைக் கவனிப்பதைவிட, பசியில்லாமல் கவனிப்பது சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு சரியான ஊட்டச் சத்து கிடைப்பதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பா்கள்.
ஆனால், இந்தத் திட்டத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகாலமாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஒரே மாதிரியாகவே கருதப்பட்டன. ஆனால், சமீப காலமாக அந்தப் போக்கு மாறியிருக்கிறது. முன்பிருந்த முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்தவர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்களும் பயன் பெற முடியும். இப்போதுள்ள புதிய திட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்போர் பயன்பெற முடியாது.
இந்தக் காலை உணவுத் திட்டத்திலும் இதே பாரபட்சம் தொடர்கிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எல்லாம் வசதியானவர்களா? மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சர். பிடி. தியாகராயர் பெயரில் கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி. அந்தப் பள்ளியில் படிப்பவர்களுக்குக் கூட காலை உணவுத் திட்டம் கிடையாது. அங்கு படிக்கும் குழந்தைகள் பணக்கார வீட்டுக் குழந்தைகளா? ஆகவே இந்தத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக