சாவித்திரி கண்ணன் : நம்மை போல சராசரியான வாழ்க்கை வாழ்பவர்களல்ல இவர்கள்! சதாசர்வ காலமும் பல்வேறு அநீதிகளை தட்டிக் கேட்டு, களம் காணும் போராட்டக்காரர்கள்!
திமுக ஆட்சியில் இது வரை 20 க்கும் மேற்பட்ட முறைகள் கைதாகியுள்ள சகோதரிகள், தற்போது ஆர்.எஸ்.எஸை எதிர்த்ததற்காக ஜீலை 10 முதல் சிறையில் உள்ளதன் பின்னணி என்ன..?
நாமெல்லாம் ஒரு அநீதியான செய்தியைப் படித்தால் மனம் கொதிப்போம்.
ஒத்த கருத்துள்ள நண்பர்களோடு பகிர்ந்து கொண்டோ அல்லது முகநூலில் எழுதியோ மனதை ஆற்றுப்படுத்துவோம்.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் அது குறித்த தகவல்களை திரட்டி, உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைப்போம்.
ஆனால், ஆனந்தன், நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகார மையத்தை நோக்கி நேரடியாக களம் கண்டு போராடுவார்கள்! சிறை செல்வார்கள்!
கடந்த 12 ஆண்டு கால போராட்ட வாழ்க்கையில் இது வரை நந்தினி நூறு முறைக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
தாங்களே கைகளால் எழுதிய பேனரை எடுத்துக் கொண்டு வீதியில் ஓரிடத்தில் நிற்பது, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை துண்டு பிரசுரமாகத் தருவது,
சில இடங்களில் வீதியில் நின்றபடி பேசுவது..இவ்வளவு தான் இவர்களின் போராட்டம்.
கொள்கை உறுதி, போராடும் விஷயங்களில் தெளிவு, சமூகத்தின் மீதான கரிசனம்..இவையே இவர்களின் தொடர் போராட்டங்களை சாத்தியப்படுத்துகிறது.
குறிப்பாக மதுக் கொடுமைகளுக்கு எதிராக – அரசே டாஸ்மாக் நடத்துவதற்கு எதிராக மட்டும் இது வரை 50 முறை கைதாகி இருக்கக் கூடும்.
தற்போது சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு காரணம் இன்றைய மத்திய அதிகார மையத்தின் தாய் அமைப்பு ஊட்டியில் ஒரு வார காலம் ஒரு தனியார் பள்ளிக்கு அடாவடியாய் லீவு கொடுக்கச் செய்து நடத்திய அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டத்தை எதிர்த்ததற்காகத் தான்!
காலையில் கைது செய்து மாலையில் விட்டுவிடக்கூடிய சாதாரண ஒரு கைதை 28 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது திமுக ஆட்சி!
இதே போலத் தான் சென்ற ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் காந்தி கிராம பல்கலைக்கு வந்த போது கறுப்பு கொடி காட்டுவேன் என அறிவித்திருந்த நந்தினியை திமுக அரசின் காவல்துறை மூன்று நாட்கள் முன்பே கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தது.
எதிர்கட்சியாக இருக்கும் போது பிரதமரின் வருகைக்கு திமுக கறுப்பு கொடி காட்டியதை அன்றைய ஆடசியாளர்கள் அனுமதித்தனர் தானே!
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்தை மறுப்பதா திமுக அரசு? எனக் கேள்வி எழுப்பினார்.
”வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்து மற்ற நாடுகளைப்போல வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தேர்தலில் போட்டியிட தடை விதித்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் முன்பாக வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்” என இந்த சகோதரிகள் அறிவித்திருந்த நிலையில் தான்
அவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனத்திற்குரியதாகும்.
இதன் பின்னணியில் மத்திய டெல்லி அதிகார மையமும் அதன் தாய் அமைப்பான காவிக் கூட்டத்தின் அழுத்தமும் இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா?
தமிழக ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் வாய் திறந்து நியாயம் கேட்டால் நன்றாக இருக்கும்.
30 வயது நந்தினியும், 25 வயது நிரஞ்சனாவும் அந்த வயது பெண்களுக்கே உள்ள கனவுகளை, ஆசைகளைத் துறந்து , வாழ்க்கையைத் தொலைத்து பொது நன்மை கருதி தொடர்ந்து இடையறாது போராடி, சிறை வாழ்க்கை அனுபவிக்கின்றனர் என்பதை தமிழ்ச் சமூகம் சரியாக இன்னும் உணரவில்லை. அவர்களுக்கு துணை நிற்பது நம் அனைவரின் கடமையாகும்.
முழு கட்டுரையை விரிவாக படிக்க விரும்புபவர்கள் அறம் இணைய பக்கத்திற்கு செல்லவும்.
சாவித்திரி கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக