tamil.samayam.com : டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை:
நேற்றைய தினம் கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களாக தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன உளைச்சல் காரணமாகவும் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கண் கலங்க வைக்கும் டிஐஜி விஜயகுமார் ஆடியோ:
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, பணி மாறுதல் பெற்ற போது காவலர்களுக்காக வெளியிட்ட ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியிருப்பதாவது: என் இனிய திருவாரூர் மாவட்ட காவல்துறை சகோதர, சகோதரிகளே. உங்களுடைய வேலையில் கடின உழைப்பு, தியாகம் ஆகியவற்றைக் கண்டு மெச்சுகிறேன், மெய்சிலிருக்கிறேன். ஓராண்டு காலம் உங்களோடு பணிபுரிந்ததில் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியினால் எனக்கு பெயர் கிடைத்தது. உங்களது வெற்றி எனது வெற்றியாகும். இந்த ஓராண்டு காலம் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றினீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை தலைவணங்குகிறேன்:
கடினமான சூழ்நிலைகள் உதாரணமாக நீடாமங்கலம் கொலை, முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் போன்ற பிரச்சனையில், மிகவும் ஒற்றுமையுடனும், டெடிகேட் ஆகவும் வேலை செய்தீர்கள். உங்களது பணியால் பிரச்சனை உடனே தீர்ந்தது. மாவட்ட காவல்துறையில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. உங்களது சீரான பணிக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்குகிறேன்.
தேனியின் சொத்து.. யார் இந்த சி. விஜயகுமார் ஐபிஎஸ்?.. முழு பின்னணி..!
வேலைப்பளு காரணமாக.. என்னை மன்னித்து விடுங்கள்:
வேலைப்பளு காரணமாக உங்களிடம் சற்று கடினமாக நடந்திருக்கலாம். ஒரு சில சூழ்நிலைகள் என்னை இழுத்துச் சென்றது.அதற்காக மிகவும் வருத்தப்படுகின்றேன். எனது கோபத்திற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். அதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் வேலையின்போக்காக எடுத்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன. விதி வழி செய்யுமானால் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் தஞ்சை சரகத்தில்... நன்றி... வணக்கம்!" இவ்வாறு அந்த ஆடியோவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் இந்த நிலையில் இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் வைரல் ஆகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக