Dinamalar : கும்மிடிப்பூண்டி,---கந்துவட்டி மிரட்டலுக்கு பயந்த தம்பதி விஷம் குடித்ததில், கணவரை தொடர்ந்து மனைவியும் இறந்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரகாஷ், 48, சரிதா, 40. பிரகாஷ், ஜெ., பேரவை செயலராக இருந்தார். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பிரகாஷ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், மிரட்டலுக்கு அஞ்சி, இரு தினங்களுக்கு முன், வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை, பிரகாஷ், சரிதா இருவரும் குடித்து, தற்கொலைக்கு முயன்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் பிரகாஷ்உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சையில் இருந்த சரிதா, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தம்பதி தற்கொலைக்கு காரணமான, ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா, 40, மற்றும் நியாஸ் ஆகிய இருவரை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இருவரும் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக