ஞாயிறு, 23 ஜூலை, 2023

கலைஞர் மகனை நம்பினோம்! நடுத்தெருவில் நிற்கிறோம்... ஆசிரியர்கள் குமுறல்!

மின்னம்பலம் - christopher : டெட் 2013 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
இன்று (ஜூலை 22) சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே விடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களது கோரிக்கைகள் என்ன?  
என்று நமது மின்னம்பலம் யூடியூப் சேனல் வாயிலாக  கேட்டறிந்தோம். அவற்றில் சில ஆசிரியர்களின் ஆதங்கங்களை, கோரிக்கைகளையும் இங்கு பதிவு செய்கிறோம்.

எங்க ஓட்டு வாக்கா? வாய்க்கரிசியா?

இளங்கோவன் (மதுரை)

இது எங்களோட 42வது போராட்டம். எங்களோட கோரிக்கை என்னவென்றால், 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்தவேண்டும் என்பது தான். இதனை திமுக, அதிமுக என இரண்டு அரசுகளுக்கும் கோரிக்கையாக வைத்தோம். கடந்த தேர்தல்களில் அவர்களுக்காக களப்பணியாற்றி வெற்றிபெற செய்தோம்.

தேர்தல் நேரத்தில் வெற்றிக்கு பக்கத்தில் நின்றோம். இப்போது துக்கத்தில் தூர நிற்கிறோம்.

முதல்வர் வாக்குறுதி கொடுத்து ஆயிரம் நாட்கள் கடந்துடுச்சி. அதனால் தான் நாங்கள் அளிச்சது வாக்கா? அல்லது எங்களுக்கு நாங்களே போட்டுக்கொண்ட வாய்க்கரிசியா? என்று கேட்க தோன்றுகிறது.

தேர்தல் கூட வரைக்கும் அன்பில் ஆதவனா இருந்தவரா இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இப்போ அன்பில்லாதவரா மாறிட்டாரு.

திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்பார்கள். இப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகள் ஆகிறது என்றால், அந்த கதாநாயகன் என்ன ஆண்மையை இழந்துவிட்டனா என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

கலைஞர் சொல்லாததையும் செய்தவர் என்பார்கள்… அப்போ நீங்க (ஸ்டாலின்) சொன்னதையாச்சும் செய்யனும்ல.

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை அப்போது கண்டிச்சிட்டு,  இப்போது திமுக செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

இல்லம் தேடி கல்வி ஒரு பெயிலியர் சிஸ்டம்!

கண்ணன் (மயிலாடுதுறை)

டெட் பாஸ் செய்துவிட்டோம் என்று கூறி தான் கல்யாணமே செய்து கொண்டோம். இப்போ இரண்டு குழந்தையும் பொறந்திடுச்சி. அதுங்களுக்கு தேவையான அடிப்படை விஷயத்தை கூட என்னால பண்ண முடியல. நான் ஒரு கல்லூரியில் 6 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு உதவி பேராசிரியரா வேல பாத்துட்டு இருக்கேன். அதுவும் இரண்டு மாசமா இல்ல.

கலைஞர் எந்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் கேட்டதே கிடையாது. ஆனா அவரா யோசிச்சி எல்லோருக்கும் அரசு வேலை கொடுத்தாரு. ஆனா அவருக்கு பிறந்த முதல்வருக்கு பக்கத்துல இருக்க ஐஏஎஸ் அதிகாரிங்க எங்களோட கஷ்டத்த அவருகிட்ட சொல்றாங்களா இல்லையான்னு தெரியல.

இல்லம் தேடி கல்வி ஒரு பெயிலியர் சிஸ்டம். ஆனா அதுல உள்ளவங்களுக்கு தான் இப்போ முன்னுரிமை கொடுக்குறது வேதனையா இருக்கு.

பெட்டில போட்டது எங்க போச்சுனு தெரியல!

பூங்கொடி (சேலம்)

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது வெயிட்டேஜ் முறையை கொண்டு வந்தாங்க. அவங்க 2013 டெட் தேர்வில் பாஸ் செய்த வீட்டில் ஒருவருக்கு வேல கொடுக்குறோம்னு சொன்னாங்க. அவங்க நிலமை சரியில்லாம ஆனதும், முதல்வராக வந்த எடப்பாடி பழனிசாமி வயது வரம்பை 45 ஆக கொண்டு வந்தார்.

அப்போது எதிர்கட்சியா இருந்த மு.க.ஸ்டாலின். ’இதெல்லாம் அநியாயம் இல்லையா?’ என்று பேசினார்.

அவரிடம் நாங்கள் இதுதொடர்பா கோரிக்கை வைத்தபோது, 2013ல் தேர்வானவங்களுக்கு உறுதியாக வேல கொடுப்போம்னு சொல்லி பெட்டியில் போட்டாரு. அது இப்போ எங்க போச்சோ தெரியல.

இத செய்யுற அரசாங்கத்துக்கு கோடி நன்றி!

தினேஷ் (திருவாரூர்)

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல… அதான் எங்களோட நிலைமை. அவங்களுக்கு 5 வருஷத்துல ஆட்சி மட்டும் தான் மாறுது. ஆனா எங்களுக்கு வயசு போகுது. இதனால் எங்க குடும்ப சூழ்நிலை, வாழ்வாதாராம் பாதிக்கப்படுது.

எங்களுக்கு 2021ஆம் ஆண்டு கொடுத்த 177வது தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்துங்க அப்படினு தான் கேக்குறோம். அரசாணை 149ஐ கேன்சல் பண்ணுங்க.

இத மட்டும் செஞ்சா நாங்க ஏன் போராட போறோம். இத செய்யுற அரசாங்கத்துக்கு கோடி நன்றி சார்!

ஸ்டாலினுக்கு ஏன் டீச்சர்ஸ் மேல அக்கறை இல்ல!

2023 batch tet teachers protest and their opinions

மல்லிகா (கன்னியாகுமரி)

2013 டெட் தேர்வில் பாஸ் செய்தவங்களுக்கு பணி வழங்குறதுல சட்ட சிக்கல் இருக்குதுனு சொன்னாங்க. பாதி பேருக்கு பணி வழங்கியாச்சின்னும் போது மீதி உள்ளவங்களுக்கும் பணி வழங்க வேண்டி தானே?

2013ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதின்னு சொன்னாங்க. அதை நாங்க நம்பினோம். அதனால திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கன்னு சொல்லி சொல்லி ஓட்டுக்கேட்டோம்.

ஆனா ஆட்சிக்கு வந்த அவங்க வாக்குறுதிய நிறைவேத்தல. இன்னொன்னு பணி வயது வரம்பை 57வரை இருக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

கலைஞர் ஆட்சியில ஆசிரியர்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தாங்க… அதே கலைஞருக்கு மகன் தானே மு.க.ஸ்டாலின். அவரு ஏன் டீச்சர்ஸ் மேல இப்படி அக்கறை இல்லாம இருக்காருன்னு கேள்வியா இருக்கு.

தனியார் பள்ளிகள்ல கூட வேலை இல்ல!

2023 batch tet teachers protest and their opinions

சரவணன் (சேலம்)

பணி ஆணை வழங்காததால் இப்போ பலபேரு செங்கல் சூளையில், லாரி கிளீனரா என்று வேலை செஞ்சிட்டு இருக்கோம்.

இந்த 2013 டெட் தேர்வில் பாசாகிட்டோம் என்பதாலேயே பல தனியார் பள்ளிகள்ல எங்கள வேலைக்கு எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ’உங்களுக்கு அரசு வேலை கெடச்சி பாதிலேயே போய்ட்டீங்கனா நாங்க என்ன பன்றது’ன்னு கேள்வி கேக்குறாங்க.

விடிவு கிடைக்கும்னு நம்புறோம்!

2013 batch tet teachers protest and their opinions

ரிச்செல்லா மேனகா (தென்காசி)

இவரு (மு.க.ஸ்டாலின்) நல்ல முதல்வரா இருப்பாருன்னு நெனச்சி தான் ஓட்டு கேட்டோம்.. ஓட்டு போட்டோம்.. ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு விடிவு கெடைக்கல. கலைஞர் ஆட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுத்து ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாரு. அவரு வழியில முதல்வர் ஸ்டாலின் இப்போ எங்களுக்கு வேலை கொடுப்பாருன்னு நியாயமான காரணத்தால் தான் இங்க போராடுறோம். விடிவு கிடைக்கும்னு நம்புறோம்!.

நெறியாளர் – கிட்டு | புகைப்படம் – மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக