செவ்வாய், 18 ஜூலை, 2023

அமைச்சர் பொன்முடிக்கு 72 வயது.. அமலாக்கத்துறையா சித்திரவதைக் கூடமா? மாலை மீண்டும் விசாரணை - வழக்கறிஞர் சரவணன் அண்ணாத்துரை

tamil.oneindia.com  -  Noorul Ahamed Jahaber Ali : சென்னை: அமைச்சர் பொன்முடியை மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருமான அமலாக்கத்துறை அழைத்துள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக வழக்கறிஞர் சரவணன்,
 "இப்போது 3.30 மணி. காலை 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 3.30 மணி வரை விசாரித்து இருக்கிறார்கள். அவருக்கு வயது 72. ஏற்கனவே உடலில் பல சில பிரச்சனைகள் உள்ளன.
 இப்படித்தான் அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடக்கிறது.
3.30 மணி வரை உட்கார்ந்து இருக்கும் நமக்கே சோர்வாக இருக்கிறது. அவருக்கு எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட ஒரு மன உளைச்சலை, உடல் உளைச்சலை இது கொடுத்திருக்கும்? இப்படித்தான் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை எச்சரித்து இருக்கிறது. அதற்காகவே மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. மனித உரிமைகளை காப்பாற்ற சட்டம் உள்ளது.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இரவு 3.30 மணி வரை வாக்குமூலம் வாங்குவேன் என்கிறார்கள். இதை நாளை வாங்கினால் வாக்குமூலம் மாறப்போகிறதா? ஆதாரங்கள் அழியப்போகிறதா? 2007 ஆம் ஆண்டு வழக்கிற்கு 2023 ஆம் ஆண்டில் விசாரிப்போம் என்கிறது அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறை அலுவலகமா அல்லது சித்திரவதைக் கூடமா என்று தெரியவில்லை. உங்களுக்கு திமுக அமைச்சர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்களா? கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள், ரூ.127 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு, குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது.

இன்று விசாரணை முடித்துவிட்டு அண்ணன் சென்றுள்ளார். மாலை 4 மணிக்கு மீண்டும் வர சொல்லி இருக்கிறார்கள். பொன்முடியை குறிவைப்பதற்கு காரணம் ஆளுநர் ரவிதான். கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் துணை வேந்தர் நியமனம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை ஏற்கவில்லை. சித்தாந்த ரீதியாக ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தவர் பொன்முடி.

போனவாரம் ஆளுநர் டெல்லி சென்றார். அடுத்த வாரம் அமலாக்கத்துறை வருகிறது. 2007 இல் நடந்த வழக்கிற்கு 2023 ல் எந்த ஆதரத்தை தேடுகிறீர்கள். என்ன கிடைக்கும்? 10 வருடம் கழித்து ஆவணம் தேடினால் கிடைக்குமா என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், அமலாக்கத்துறை 10 ஆண்டுகள் கழித்து தேடுவோம். 3.30 மணி வரை விசாரிப்போம் என மனித தன்மையற்ற முறையில் செயல்படுகிறது.

அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என கோடிக்கணக்கில் சொத்தை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தேர்ந்தெடுத்த தகவல்களை கசியவிடுகிறது. அமலாக்கத்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஏதாவது ஒரு தகவல் வந்ததா? பெயரை கெடுக்க வேண்டும். திமுக அரசு மீது கலங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இவர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாடு மக்களிடம் அம்பலப்பட்டுபோவார்கள்.

அதிமுக ஆட்சியில் எத்தனையோ சோதனைகள் நடந்தன. அதில் ஏதாவது முடிவுகள் வந்ததா? இவர்கள் 2024 தேர்தலுக்காக இப்படி ஒரு மிரட்டலை செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் 3.30 மணி வரை வைத்திருந்தது நல்ல விதமாக வைத்திருப்பதா? அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொன்முடி முடிவு செய்வார். மீண்டும் ஏன் விசாரணை என்பது அமலாக்கத்துறைக்கே தெரியும்.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? 10 ஆண்டுக்கு முன் உளுத்துப்போன வழக்கை எடுத்துக்கொண்டு அமலாக்கத்துறை சோதனை செய்கிறது. இது திமுகவுக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல். இந்திய அளவில் கூட்டணி அமைக்க முயல்வதால் மத்திய அரசு மிரட்டல் விடுக்கிறது. அடுத்து என்ன செய்கிறது? என்று பார்ப்போம்.” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக