வியாழன், 13 ஜூலை, 2023

பாலியல் குற்றவாளி சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு- வருகிற 31-ந்தேதிக்குள் நேரில் வருமானு உத்தரவு

மாலைமலர் : சென்னை தி நகரை சேர்ந்தவர் சதுர்வேதி சாமியார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை மயக்கி கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சதுர்வேதி சாமியார் சிறப்பு பூஜைகளை செய்து வந்தார்.
அப்போது தனது பிரச்சினைகளுக்காக தொழில் அதிபர் ஒருவர் சதுர்வேதி சாமியாரை பார்க்க சென்றபோதுதான் அவரது மனைவியையும் மகளையும் சதுர்வேதி சாமியார் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது போன்று சதுர்வேதி சாமியார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 வழக்குகள் அவர் மீது போடப் பட்டிருந்தது. இந்த வழக்கு களில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் அவர் தப்பி ஓடி தலை மறைவானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு அளித்தனர். இதை ஏற்று சென்னை மகிளா கோர்ட்டு சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

வருகிற 31-ந் தேதிக்குள் சதுர்வேதி சாமியார் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, சதுர்வேதி சாமியார் மீது போடப்பட்டு உள்ள 5 வழக்குகளிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பாலியல் வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக 2020- ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2 வதாக மோசடி வழக்கு ஒன்றில் அவர் தற்போதும் கோர்ட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

சதுர்வேதி சாமியார் மீதான வழக்குகளில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சதுர்வேதி சாமியார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக