வியாழன், 20 ஜூலை, 2023

இந்தியாவின் கோடீஸ்வர எம் எல் எக்களில் கர்நாடக டி.கே.சிவகுமார்:முதலிடம் ரூ.1413 கோடி

 மாலைமலர் :  பெங்களூரு நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.
இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.


இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.

2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டாசுவாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.வுமான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா உள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.

கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்.எல்.ஏ. கலிஜனார்த்த ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா இடம்பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்கள் வெறும் ரூ.1700 தான். இவருக்கு அடுத்த்அ இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்தா முதுலிஒ பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே. மேலும் ரூ.18 ஆயிரத்து 370 சொத்துக்களை கொண்ட பஞ்ச்சாபின் நரீந்தர்பால்சிங் சாவ்னா 3-வது இடத்திலும், ரூ.24 ஆயிரத்து 409 மதிப்பு சொத்துகளுடன் பஞ்சாப் நரிந்தர் கவுர்பராஜ் 4-வது இடத்திலும், ரூ.30 ஆயிரம் மதிப்பு சொத்துடன் சார்க்கண் எம்.எல்.ஏ. மங்கள் கலிந்தியும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக