மின்னம்பலம் monisha : குழந்தை திருமணம் குறித்து ஆளுநர் தெரியாமல் பேசி வருகிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 169 ஆவது வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் ‘அண்ணா சாலை’ பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து எல் சி ஜி சாலையில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் நியாய விலை அங்காடியை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
”சென்னை சைதாப்பேட்டையில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 169 வது வார்டில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக இருந்த நிலையில் எல்.டி.ஜி சாலையில் 14.5 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையும், வேளச்சேரி- சின்னமலை இணைப்பு சாலையில் 16 லட்சம் மதிப்பில் மேலும் ஒரு புதிய ரேஷன் கடையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு,
”இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம். தொடர்ந்து அது குறித்து பேசினால் குழந்தையின் எதிர்காலம் மற்றும் பெண்ணியத்தை தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற நிலை வரும். ஆளுநர் தெரியாமல் பேசி வருகிறார். எனவே இது குறித்து விமர்சனம் செய்யாமல் இதோடு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து, “தேசிய தரவரிசை பட்டியலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி 11வது இடம் பிடித்தது மகிழ்ச்சி. கடந்த முறை 16வது இடத்திலிருந்து தற்போது 11வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் எந்த அரசு கல்லூரியும் இடம்பெறவில்லை. பதினோராவது இடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை வந்துள்ளது.
தர்மபுரி, திருச்சி, சென்னை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்துப் பேச உள்ளோம்” என்றார்.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கை குறித்த கேள்விக்கு,
”தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பெரிய அளவில் கவலைப்படாதவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து யோசிக்கவே தெரியாதவர்கள் சொல்கிற விமர்சனம் இது. இது ஆளுநர் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருந்தும்” என்று பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக