மாலை மலர் : உணவை பசிக்காக சாப்பிட்டு வந்த காலம் போய், ருசிக்காக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது.
குடும்ப விழா, கோவில் விழா என எத்தனையோ விழாக்களை கொண்டாடிய நாம் இன்று உணவு திருவிழாவையும் கொண்டாடுகிறோம்.
அறுசுவை உணவு என்ற நிலை மாறி, ஆயிரம் சுவைகளில் உணவு தயாரித்து வயிறு புடைக்க சாப்பிடுகிறோம்.
இதனால் உணவு திருவிழாவும் ஒருவித பண்டிகையாக மாறிவருகிறது. இந்த மனித பிறப்பே தினமும் வகை, வகையாக சாப்பிடத்தான் என்ற சிந்தனை கொண்டவர்களும் இருக்கின்றனர்.
அசைவம்
உணவில் எத்தனை வகைகள் இருந்தாலும் சைவம், அசைவம் என்று இரண்டாக பிரித்து விடலாம்.
இந்த இருவகை உணவுகளும் ஆதி மனிதன் காலத்தில் இருந்தே இருக்கிறது. விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட தொடங்கியதில் இருந்தே அசைவம் இருக்கிறது.
அதை நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் பிறக்க தொடங்கின. பச்சை மாமிசம், சுட்ட மாமிசம் என அசைவ உணவுகள் இரு வகையாக மாறின. பின்னர் நறுமண பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் அதிகரிக்க தொடங்கின.
ஆவல் அதிகரிப்பு
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்தில் ஒருநாள் அல்லது அதிகபட்சம் 2 நாட்கள் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. பண்டிகை, திருவிழா என்றால் உறவினர்களுடன் சேர்ந்து அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் பண்டிகை, திருவிழா என்றால் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. மற்ற நாட்களில் கோழி முட்டை தான் அசைவ உணவாக இருந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகள் மீதான ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாரத்தில் ஒருநாள் கட்டாயம் சிக்கன், மட்டன் சாப்பிட வேண்டும். மேலும் 2 அல்லது 3 நாட்கள் மீன் சாப்பிட வேண்டும் என்ற விருந்து வேட்கை பலரிடம் இருக்கிறது. முன்பு அசைவமாக இருந்த முட்டையை சைவ பட்டியலில் சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.
ஒருசிலர் நேரம் காலம் பார்க்காமல் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். இதனால் ஊர்வன, பறப்பன, தாவி குதிப்பன உள்பட அனைத்தும் உணவாக மாறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டினரை போன்று விதவிதமாக சாப்பிடும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அசைவ உணவுகளுக்கு பஞ்சம் வந்துவிடுமோ? என்று அஞ்சும் அளவுக்கு பலரின் அசைவ உணவு வேட்டை இருக்கிறது.
குழந்தைகள், இளைஞர்கள்
தினந்தோறும் மீன், கோழி, ஆடு, மாடு என அசைவ உணவுகளை சமைத்து போட்டாலும் சலிக்காமல் சாப்பிடுகின்றனர். அதிலும் குழந்தைகள், இளைஞர்கள் விரும்பி சாப்பிடுவது அசைவ உணவாக தான் இருக்கிறது. பால் பற்கள் முளைத்த குழந்தைக்கு கூட பொரித்த சிக்கன்-65 துண்டுகளை கொடுக்கின்றனர்.
எனவே அசைவ பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மதியம் பல ஓட்டல்களின் முன்பு அறிவிப்பு பலகையில் அன்றைய அசைவ உணவு வகைகளை எழுதி வைக்கின்றனர்.
அதை பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் அசைவ பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித அசைவ உணவுகளை தயாரித்து அசத்துகின்றனர்.
ஆட்டின் பாகங்கள் அனைத்தும் உணவு
அசைவ உணவில் ஆட்டு இறைச்சிக்கு நிகரான சுவையில் எதுவுமே இல்லை என்பது பெரும்பாலான அசைவ பிரியர்களின் கூற்றாக இருக்கிறது. இதனால் ஆட்டு இறைச்சி கடைகளில் குறைவில்லாத கூட்டம் காணப்படுகிறது. ஆட்டு இறைச்சியின் விலை கிலோ ரூ.1,000 ஆக உள்ளது. ஆட்டின் இறைச்சி மட்டுமின்றி ஈரல், நுரையீரல், மூளை, குடல், கால்கள், தலை உள்பட (தோல், புழுக்கை தவிர) அனைத்து பாகங்களும் உணவாகி விடுகிறது. ஆட்டின் பாகங்களை விதவிதமாக சமைத்து சப்பை கொட்டி சாப்பிடுகிறோம்.
ஒரே ஓட்டலில் அசைவம்-சைவம்
முன்பெல்லாம் சைவம், அசைவத்துக்கு தனித்தனியாக ஓட்டல்கள் இருந்தன. ஏதேனும் ஓரிடத்தில் தான் அசைவம், சைவத்துக்கு ஒரே ஓட்டல் இருக்கும். அங்கும் சைவம், அசைவ உணவுகளை சாப்பிட தனித்தனி இடவசதி இருந்தன. இதனால் சைவ, அசைவ ஓட்டல்களை தேடிப்பிடித்து மக்கள் உணவு வகைகளை சாப்பிட்டனர். ஒருசில ஓட்டல்களின் பெயரை கூறியதும் அது சைவமா? அல்லது அசைவமா? என்று கூறிவிடும் வகையில் இருந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவோர் அதிகரித்து விட்டதால், சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவுகளும் ஒரே ஓட்டலில் விற்கப்படுகின்றன. சைவ ஓட்டல், அசைவ ஓட்டல் என்ற நிலைமாறி சைவம்-அசைவம் ஓட்டல் என்று மாறிவருகிறது.
அபாயம்
சந்தை, மார்க்கெட், கடைவீதிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அசைவ உணவு வாசனை மூக்கை துளைக்கிறது. திண்டுக்கல் உள்பட ஒருசில ஊர்களில் காலை 7 மணிக்கே பிரியாணி விற்கும் அளவுக்கு அசைவ பிரியர்கள் அதிகரித்து விட்டனர்.
அதிலும் ஓட்டல்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்களில் கோழி இறைச்சி, மீன்களை பொரித்து விற்கின்றனர். அதை சாப்பிடுவதற்கு தனியாக அசைவ பிரியர்கள் கூட்டமே இருக்கிறது. மேலும் மது குடிப்பவர்களின் பிடித்த உணவும் பொரித்த இறைச்சி தான்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் இருப்பதை பலரும் மறந்துவிட்டனர்.
நோய்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை வரைமுறை இல்லாமல் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடுகிறது. இதனால் உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், பித்தப்பை கல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
அதிலும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் வாலிப பருவம் வரும்போது பலவித உடல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதன்மூலம் நோயாளிகளும், மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதற்கு அலட்சிய போக்கே காரணம் ஆகும்.
நமது உடலுக்கு ஏற்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதே ஆரோக்கியத்தை தரும். எனவே உணவில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த உலகில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகி, நீண்டகாலம் நோய்நொடியின்றி வாழ அசைவ உணவுகளை குறைப்போம். வாழ்வில் வளம்பெறுவோம்.
அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை
அசைவ உணவு பற்றி ஒய்வுபெற்ற நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், அசைவத்தில் புரோட்டீன், பி-12, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. எனினும் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். அதிலும் இதய கோளாறு உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் அவற்றை சாப்பிடலாம். அதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய் வந்துவிடும். இதுதவிர செரிமான பிரச்சினை ஏற்பட்டு உடல் உபாதைகளை உண்டாக்கும். அதனால் 50 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இதய நோயாளிகள் முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடாமல், புரோட்டீன் நிறைந்த வெள்ளைக்கருவை சாப்பிடலாம். இதுதவிர ஐஸ்கிரீம், பால் பொருட்களை சாப்பிடாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
அசைவ உணவுகளை தவிர்க்கும் அதேநேரத்தில் புரோட்டீன் நிறைந்த சோயாபீன்ஸ், பயறு வகைகள், பாலாடை கட்டி, காளான் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். அதேபோல் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதிலும் எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவதை கைவிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது, என்றார்.
சிக்கன்-65 கடைகளில் அலைமோதும் கூட்டம்
அசைவ பிரியர்களின் நாவை அடிமையாக்கும் வகையில் சிக்கன்-65 கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் கூட சிக்கன்-65 கடைகள் உருவாகிவிட்டன. நாவை நடனமாட வைக்கும் ருசி, கண்களை பறிக்கும் நிறத்தில் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுத்த சிக்கன்-65 துண்டுகளை சாப்பிடுவதற்கு மாலை நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் எண்ணெயில் பொரித்த சிக்கன்-65 வகைகளை வாங்கி சுவைத்து, வயிற்றை நிரப்பும் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
திருமண வீடுகளில் அசைவம்
திருமண விழாவில் மணமக்கள் கழுத்தில் அணிவது முதல் மணமேடை அலங்காரம் வரை அனைத்திலும் பூக்கள் முக்கிய இடம் வகிக்கும். மணமகள் மட்டுமின்றி திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவரும் கூந்தலில் சற்று கூடுதலாகவே பூக்களை சூடிஇருப்பார்கள். திரும்பிய திசையெல்லாம் பூக்கள் காட்சி அளிப்பதே திருமண விழாவின் சிறப்பு. இதனால் திருமண வீடுகளில் 3 நாட்கள் பூ வாசனை வீசும்.
இதற்கடுத்து திருமண விழாவில் அறுசுவை உணவு விருந்து மணம் வீசும். இந்த அறுசுவை விருந்தில் உணவு சாப்பிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அசைவ உணவு பழக்கம் திருமண வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. சமீபகாலமாக திருமண வீடுகளில் கூட அறுசுவை உணவுக்கு பதிலாக அசைவ விருந்து அளிக்கப்படுகிறது.
சிக்கன் பிரியாணி, கறிக்குழம்பு சாதம், சிக்கன் கூட்டு, சிக்கன்-65 என திருமண விருந்தில் அசைவ வாசனை ஆட்களை அசைத்து விடுகிறது. இதை உற்றார், உறவினர்கள் குடும்பத்துடன் வந்து விளாசுகின்றனர். ஆரோக்கியமான அறுசுவை விருந்து, அசைவ விருந்தாக மாறி வருகிறது. இந்த அசைவ விருந்து பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பூ வாசனை, அறுசுவை விருந்து மணம் மறைந்து அசைவ உணவின் வாசனை தான் வீசுகிறது. திருமண விழாவில் அனைத்து வயதினரும் சாப்பிடுவார்கள் என்பதால் முன்னோர்கள் சைவ விருந்து அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் அதிகரித்து வரும் இந்த காலத்தில் அசைவ விருந்து அளிப்பது நோயாளிகளை சங்கடப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. எனவே திருமண விழாவுக்கு வரும் அனைவரும் ஆரோக்கியமாக வாழ அறுசுவையுடன் சைவ விருந்து அளிப்பதை அனைவரும் பின்பற்றலாமே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக