வியாழன், 22 ஜூன், 2023

எதிர்க்கட்சி கூட்டத்தை ஆம் ஆத்மீ புறக்கணிக்க போவதாக அர்விந்த் கேஜரிவால் எச்சரிக்கை . காங்கிரசுக்கு நிபந்தனை

 tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : :டெல்லி: காங்கிரஸ் கட்சி மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளாவிட்டால் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் தொடரும் மோடி அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் ஓராண்டே மீதம் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் இப்போதே இறங்கி உள்ளன.


மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளன. பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓரணியில் போட்டியிட வைத்து பாஜகவை வீழ்த்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி பாஜக கூட்டணியில் இல்லாத பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இதை முழு மூச்சாக செய்து வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த ஓராண்டில் பயணம் மேற்கொண்ட நிதீஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோரை அவர் சந்தித்து பேசி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலைவர் பத்ருதீன் அஜ்மல் ஆகியோரையும் நிதீஷ் குமார் சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தார் நிதீஷ் குமார். இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள இருந்தன. ஜூன் 12 ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த கூட்டத்தை தள்ளி வைக்குமாறு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்டுக்கொண்டன. இதனை அடுத்து ஜூன் 23 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று அறிவித்தார் நிதீஷ் குமார். இதில் கட்சிகளின் பிரதிநிதிகள் அனுப்பாமல் தலைவர்களே பங்கேற்க வேண்டும் என அவர் சொல்லி இருந்தார்.

நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பாட்னாவுக்கு புறப்பட்டு உள்ளார்கள். இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியில் இதில் பங்கேற்க புதிய நிபந்தனை ஒன்றை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசு அதிகாரத்தை கட்டுப்படுத்துவது பற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. டெல்லி யூனியன் பிரதேச அரசின் உரிமை இந்த அவசர சட்டத்தால் பறிபோகும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் வாதம். இதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், முக ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து தனது ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில்தான், மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் அவசர சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காவிட்டால் பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக