திங்கள், 12 ஜூன், 2023

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் (இலங்கை) போட்டியிட்டே தெரிவாக விரும்புவதாக தெரிவிப்பு

BBC Tamil  : சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் பிரபல பொருளாதார நிபுணரும் முன்னாள் துணைப் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடவுள்ளார்.
இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் மற்றும் சமூக கொள்கைகள் அமைச்சரர் மற்றும் மத்திய வங்கித் தலைவர் உட்பட பல பதவி விகித்து வந்த தர்மன் சண்முகரத்தினம்,
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.  பிரதமர் லீ சியென் லூங்க்கு தர்மன் சண்முகரத்தினம் எழுதியுள்ள கடிதத்தில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளதுடன், அரசியலிலிருந்து  தான் ஓய்வு பெறுவதாகவும், அரசாங்கத்தில் தான் விகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சியின் (பிஏபி) அங்கத்துவத்திலிருந்தும் ஜூன் 7 ஆம் திகதியுடன் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கப்பூர் நாணய அதிகார சபை என அழைக்கப்படும் சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைவர், பதவி, சிங்கப்பூர் முதலீட்டுக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்,  சிங்கப்பூர் பொருளாதார அபிவிருத்திச் சபையின் சர்வதெச ஆலோசனைப் பேரவையின் தலைவர் உட்பட ஏனைய பதவிகளிலிருந்தும் தான் இராஜினாமா செய்வதாக தர்மன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜனாதிபதி பதவி கட்சி சார்பற்றது என்பது குறி;ப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல் கட்சி உறுப்பினராக இருக்க முடியாது என்பது குறிப்பிடத்கதக்து.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள, தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘சிங்கப்பூர் மத்திய வங்கியிலுலும், அரசாங்கத்திலும் 27 வருடங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியவதை குறிப்பிட்டுள்ள பிரதமர் பிரதமர் லீ சியென் லூங், 40 வருடங்களாக சிங்கப்பூருக்கு தர்மன் சண்முகரத்தினம் ஆற்றிய சேவைகளையும் பாராட்டியுள்ளார்.

பிரதமர் லீ சியென் லூங், தர்மன் சண்முகரத்தினம்

‘சிங்கப்பூர் வளர்ச்சியில் அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் நீங்கள். அடுத்த தலைமுறை அமைச்சர்களை உருவாக்க எனக்கு உதவினீர்கள்’ என பிரதமர் லீ சியென் லூங்  தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதியாக தெரினால் எப்போதும் போல் நீங்கள் கவனமாகவும், சுயாதீன மனதுடன் பணியாற்றுவீர்கள்’ எனவும், ‘உங்கள் சர்வதேச தகுதியும் அரசாங்கத்தில் உங்கள் அனுபவமும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு உதவும் எனவும் பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்துக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் சியென் லூங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

66 வயதான தர்மன் சண்முகரத்தினம், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சிங்கப்பூரை பிறந்த அந்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவத்துறை பேராசிரியர் கனகரட்ணம் சண்முகரத்தினம் ஆவார். சட்டத்தரணியான  ஜேன் யுமிக்கோ இட்டோகியை திருமணம் செய்த தர்மன் சண்முகரத்தினத்துக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

1957 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த தர்மன், லண்டன் பொருளியல் பாடசாலை எனும் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் பட்டம் பெற்றவர்.

பின்னர், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுநிலைப்பட்டம் பட்டத்தையும் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தையும் பெற்றார்.

சிங்கப்பூர் மத்திய வங்கியில் பிரதம பொருளியலாளராக பணியாற்றிய அவர், பின்னர், சிங்கப்பூர் சிவில் நிர்வாக சேவையில் இணைந்தார்.

கல்வி அமைச்சில் கொள்கைகளுக்கான சிரேஷ்ட பிரதிச் செயலாளராக அவர் பதவி வகித்தார். பின்னர் மத்திய வங்கியில் மீண்டும் இணைந்த அவர், அதன் முகாமைத்துவ பணிப்பாளரானார்.

2001 ஆம் ஆண்டு அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்து, தேர்தலில் போட்டியிட்டார். பிஏபி எனும் மக்கள் செயற்பாட்டு கட்சியின் சார்பில் முதல் தடiவாயக அவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.

கல்வி அமைச்சர், நிதியமைச்சர் உட்பட பல பதவிகளை வகித்த அவர், 2011 முதல் 2019 ஆம் ஆண்டு முதல் பிரதிப் பிரதமராகவும் பதவி வகித்தார்.

அதன்பின் சிரேஷ்ட அமைச்சர் எனும், பிரதமர், பிரதிப்பிரதமருக்கு அடுத்த உயர் பதவியையும் சமூகக் கொள்கைகள் பதவியையும் வகித்து வந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நாணய, நிதியியல் குழுவின் தலைவர் பதவி, மற்றும் ஜி20 அமைப்பின் பூகோள நிதியில் நிர்வாகத்தின் நிபுணர் குழுவின் தலைவர் பதவிகளையும் வகித்த தர்மன், சிங்கப்பூரிலும் சர்வதேச ரீதியாகவும் ஏராளமான விருதுகளையும் வென்றவர்.

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகுவதற்கு பல்வேறு தகுதிகளைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதித் தேர்தல்கள் குழுவின் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும்.

இத்தேர்தலில் இதுவரை வேறு எவரும் போட்டியிட முன்வரவில்லை, ஆனால், தான் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கே விரும்புவதாக தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் 6 ஆவது ஜனாதிபதியாக தமிழரான எஸ்.ஆர்.நாதன் 1999 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக