LR Jagadheesan : கொண்ட கொள்கைக்காக தம் ஒட்டுமொத்த வாழ்வையும் ஒப்புக்கொடுத்த தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அது ஒரு இயக்கமாக,
இல்லையில்லை பேரியக்கமாகவே வளர்ந்து எல்லா துறைகளிலும் விரிந்து படர்ந்து வியாபித்திருந்தது.
அதன் பெயர் திராவிடர் இயக்கம். அதன் எத்தனையோ லட்சகணக்கான கொள்கையாளர்களில் ஒருவராய் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
அதற்காக தன் உடல் பொருள் ஆவியென அனைத்தையும் தியாகம் செய்தவர்.
எந்த முன் நிபந்தனையும் விதிக்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்கிற வள்ளலாரின் வரிகளை தன் வாழ்விலும் கடைபிடித்த பகுத்தறிவுவாதி. கொள்கைரீதியில் நின்று மூர்க்கமாய் எதிர்க்கும் ஆட்களுக்கு கூட அவர்களின் நெருக்கடியில் தேவைகளில் ஓடோடிப்போய் உதவிய அருளாளன்.
கைம்மாறு கருதாமல். கொள்கை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கிற தலைமுறைக்கு இப்படியும் இந்த மண்ணில் மனிதர்கள் கொள்கைக்காகவே வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்த முடியுமா என்று தெரியவில்லை.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பேரலையாக உருவான ஒரு பேரியக்கத்தின் உன்னத தலைமுறையின் ஆகச்சிறந்த பிரதிநிதிகளில் ஒருவரோடு ஆண்டுக்கணக்கில் பழகவும் அவரால் பயிற்றுவிக்கப்படவும் வாய்த்தது நற்பேறு. வாழ்வின் பெரும் கருணைகளில் ஒன்று
எனக்கு அவர் இன்னொரு தந்தையாய் கிடைத்தது. விபத்தாய் நடந்த நல்வாய்ப்பு. ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றியமைத்த வாய்ப்பும் கூட. நினைக்காத நாளில்லை. மறக்கவோ வாய்ப்பில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக