செவ்வாய், 27 ஜூன், 2023

ஞானதிரவியம் எம்.பி (திமுக )மீது வழக்குப்பதிவு!

மின்னம்பலம் -Selvam : திருநெல்வேலி திருமண்டல சி.எஸ்.ஐ அலுவலகத்தை பூட்டி பாதிரியாரை தாக்கிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கல்வி நிலைக்குழு செயலாளராகவும், நெல்லை ஜான்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தாளாளராகவும் பணியாற்றினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஞானதிரவியத்தை தாளாளர் மற்றும் கல்வி நிலைக்குழு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திருநெல்வேலி பிஷப் பர்னபாஸ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜான்ஸ் பள்ளி தாளாளராக வழக்கறிஞர் அருள் மாணிக்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிஷப் பர்னபாஸின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை நேற்று பூட்டினர். இதனை தட்டிக்கேட்ட பாதிரியார் காட்பிரே நோபலை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் தாக்கினர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் காட்பிரே புகார் அளித்துள்ளார். மேலும் திமுக எம்.பி ஞானதிரவியம் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

காட்பிரே அளித்த புகாரின் அடிப்படையில் எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 33 பேர் மீது தாக்குதலில் ஈடுபடுதல் 147, ஆபாசமாக பேசுதல் 294 (b), குற்றம் செய்ய தூண்டுதல் 109 , மிரட்டுதல் 506 (1), காயம் ஏற்படுத்துதல் 323, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் ஞானதிரவியம் எம்.பிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரை முருகன் தெரிவித்துள்ளார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக