மாலை மலர் : சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் அளிக்கக்கூடாது என முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறுகையில், விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் அளிக்கக் கூடாது. காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது. விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு மூன்றாம் நிலை முறையை பயன்படுத்தக் கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் உடல் தகுதி குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பிறகு விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை அமலாக்கத்துறை வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக