செவ்வாய், 13 ஜூன், 2023

இறையன்பு ஐ.ஏ.எஸ் நேர்மைக்கும் மக்கள் பணிக்கும் பட்டை தீட்டியிருக்கிறார்.

May be an image of 1 person and smiling

 Kandasamy Kandasamy  :  ஓய்வுக்கு பிறகு எந்த பதவியும் வேண்டாம்’ அரசு தர முனைந்த பொறுப்பை துறந்தார் இறையன்பு ஐ.ஏ.எஸ்..!
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்
எழுத்தாளர், நேர்மையாளர், சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்ற பன்முகதன்மை கொண்ட  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, அவரது ஓய்வுக்கு பிறகு அரசு தர முன் வந்த தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்திருக்கிறார்.
இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐ.ஏ.எஸ்
மு.க.ஸ்டாலின் சாய்ஸ் - தலைமைச் செயலாளர் ஆன இறையன்பு
திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார். 

எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு செய்ததை எண்ணி எதிர்க்கட்சிகளே வியந்தன.
தகவல் தகவல் ஆணையர் பதவியை நிராகரித்த இறையன்பு
ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது மக்கள் நலத் திட்டங்களை சரியாக செயல்படுத்துவதிலும் சமூக வலைதளங்களில் ஒரு புகார் வந்தால் கூட அதனை தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். அர்ப்பணிப்பு, நேர்மை, பெரிய பதவியில் இருப்பவர் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி பணி செய்யும் மாண்பு என்று இருக்கும் அவரை விட்டுவிட வேண்டாம் என்று நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது ஓய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பதவியான தலைமை செயலாளருக்கு நிகரான அந்தஸ்துள்ள தலைமை தகவல் ஆணையர் பதவி கொடுக்க நினைத்தார்.
ஆனால், இறையன்புவோ ஓய்வு பெற்ற பிறகு எந்த பதவியும் வகிக்கக் கூடாது என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்து, அரசு தர முன் வந்த தலைமை தகவல் ஆணையர் பதவியையே துச்சமென நினைத்து தூக்கியெறிந்துள்ளார். அதோடு, தான் ஓய்வு பெறபோகும் நாள் நெருங்கி வருவதால், இதுவரை தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அனைத்தையும் மாணவ / மாணவிகளுக்கு வழங்கியுள்ளார் இறையன்பு.
சுற்றறிக்கை அனுப்பிய இறையன்பு
தலைமைச் செயலாளராக அவர் பொறுப்பேற்றபோது அரசு அதிகாரிகளுக்கு ஓர் சுற்றறிக்கையை அனுப்பினார். அதில், தலைமை செயலாளராக பணியாற்றும் வரை தான் எழுதிய நூல்களை அரசின் எந்த திட்டத்தின் கீழும் யாருக்கும் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.  அவரது இந்த அணுகுமுறை அப்போது பெரிதாக பாரட்டப்பட்டது. அதோடு, தான் மாவட்டங்களுக்கு ஆய்விற்கு செல்லும்போது தடபுடலான வரவேற்போ, உணவோ ஏற்பாடு செய்யக்கூடாது என்றும் எளிமையான உணவே தனக்கு போதுமானது எனவும் கடிதம் எழுதினார்.
’நீட்டிப்பும் வேண்டாம் ; புதிய பொறுப்பும் வேண்டாம்’
இந்நிலையில், கடந்த காலங்களில் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் உள்ளிட்டோருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதோடு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஆலோசகர், பசுமை தீர்பாய நிபுணத்துவ உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. ஆனால், இறையன்புவோ தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று சொல்லி தான் இதுநாள் வரை கட்டி காத்து வந்த நேர்மைக்கும் மக்கள் பணிக்கும் பட்டை தீட்டியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக