திங்கள், 19 ஜூன், 2023

ரூ.8½ கோடி கொள்ளை அடித்துவிட்டு நன்றி சொல்ல குருத்துவாராவுக்கு சென்ற தம்பதிகள் சிக்கினார்கள்

மாலைமலர் : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 10-ந் தேதி ஒரு நிறுவனத்தில் ரூ.8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து லூதியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது மந்தீப் கவுர் என தெரியவந்தது.
இவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. இதனால் அவரை போலீசார் டகு ஹசீனா என அழைத்தனர்.
டகு ஹசீனா ஒவ்வொரு முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதற்கு நன்றி சொல்ல சீக்கிய குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம்.
இதனை அறிந்து கொண்ட போலீசார், டகு ஹசீனா எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை கண்காணித்தனர்.

இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சீக்கிய குருத்துவாரா கோவிலுக்கு செல்வது தெரியவந்தது. உடனே பஞ்சாப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் டகு ஹசீனாவையும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கையும் தேடினர்.

கோவிலில் அப்போது விழா நடந்ததால் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பெண்கள் பலரும் முகத்தில் முக்காடு அணிந்தபடி சுற்றி வந்தனர். இதனால் டகு ஹசீனாவை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இதையடுத்து கோவில் வளாகத்தில் ஆங்காங்கே குளிர்பான பந்தல்கள் அமைத்தனர். அதில் ரூ.10 மதிப்புள்ள குளிர்பானங்களை பக்தர்களுக்கு வழங்கினர். அந்த பந்தல் முன்பு போலீசார் மாறு வேடத்தில் நின்றபடி டகு ஹசீனாவையும், அவரது கணவரையும் தேடிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் ஒரு குளிர்பான பந்தலுக்கு ஒரு பெண் குளிர்பானம் குடிக்க வந்தார். குளிர்பானத்தை வாங்கிய அவர், அதனை குடிப்பதற்காக முகத்தின் முக்காட்டை விலக்கிய போது, அவர் டக் ஹசீனாை என்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

டகு ஹசீனாவுடன் அவரது கணவரும் சிக்கினார். அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தில் ரூ.21 லட்சம் சிக்கியது. பின்னர் இருவரையும் போலீசார் உத்தரகாண்டில் இருந்து பஞ்சாப் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

ரூ.8½ கோடி கொள்ளை அடித்த டக் ஹசீனா 10 ரூபாய் குளிர்பானம் குடிக்க சென்று போலீசாரிடம் சிக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிடித்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக