மாலை மலர் : புதுடெல்லி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும்,
அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது.
மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் முதலில் சேருவதற்காக வந்த கல்லூரியில் இடமில்லாததால், அதே பல்கலைக்கழகத்தின் வேறு கல்லூரிகளில் முகவர்கள் இடம் மாற்றி தந்ததாகவும், 3-4 வருடங்கள் கடந்த பின்னர், பட்டப்படிப்பும் முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமந்தீப் சிங் எனும் மாணவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு கனடாவில் கல்வி பயில வந்ததாகவும், இந்த அறிவிப்பு பல மாணவ-மாணவியரின் மனநலத்தையும் பாதித்திருப்பதாகவும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு கனடா அரசுடன் பேச வேண்டும் என்றும் லவ்ப்ரீத் சிங் எனும் மற்றொரு மாணவர் தெரிவித்தார்.
மாணவர்கள் கனடா செல்வதற்காக வீடு, நிலங்களை விற்று, நிறைய பொருட்செலவு செய்துள்ளனர் என்றும் அவர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தலையீட்டை கோரியிருப்பதாகவும் பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்தார்.
ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுமார் 700 மாணவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் உடனடியாக தலையிட்டு, கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் இவ்விஷயத்தை எழுப்பி துரிதமாக தீர்வு காண வேண்டும் என தாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இப்பிரச்சனையில் கனடாவிலுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியபோது, மாணவர்களின் நாடு கடத்தலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ட்ரூடோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை பழி வாங்குவதல்ல என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசும் கேட்டுக்கொண்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக