வியாழன், 15 ஜூன், 2023

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் (தப்பி ஓடும்) 6,500 இந்திய மில்லியனர்கள்... இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்?

விகடன்   - இ.நிவேதா  : சாதாரணமாகவே நன்றாகச் சம்பாதிப்பவர்களின் மனநிலை, வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்த எண்ணம் மில்லியனர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக இருக்கும்.
தங்களால் எந்த இடத்தில் மிகவும் வசதியாக வணிகம் செய்ய முடிகிறதோ, அரசின் கீழ் சிறப்பாகச் செயல்பட முடிகிறதோ அந்த நாட்டை தேடிப் பறப்பது தொழிலபதிர்களிடையே வழக்கம்.
வெகு சிலரே மில்லியனர்களானாலும் தங்களது சொந்த நாட்டிலேயே இருப்பதுண்டு.
அந்த வகையில் 2023-ல் இந்தியாவில் இருந்து அதிக சொத்து மதிப்புள்ள (High Net Worth Individual) 6,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளதாக ஹென்லி பிரைவேட் வெல்த் மைகிரேஷன் (Henley Private Wealth Migration Report) அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் செல்வம் மற்றும் மில்லியனர்களின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்து வரும் இந்த அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சுமார் 13,500 மில்லியனர்கள் சீனாவிலிருந்து இடம்பெயர உள்ளனர். சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் இருந்து 6,500 மில்லியனர்கள் இடம் பெயர உள்ளனர்.

இந்தியாவில் இருந்து இடம்பெயரும் மில்லியனர்கள் தேர்வு செய்யும் இடங்கள்...
இந்தியாவில் இருந்து இடம்பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் பணக்கார இந்திய குடும்பங்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. அங்குள்ள அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய முதலீட்டாளர் `கோல்டன் விசா' திட்டம், சாதகமான வரி சூழல் மற்றும் பாதுகாப்பான அமைதியான சூழலுக்காக இங்கு இடம்பெயர்கின்றனர்.
சிங்கப்பூர்

2023 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தனது மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும்.

சுவிட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு மில்லியனர்கள் செல்வது அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளே மில்லியனர்களின் வருகை அதிகமுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.   

மில்லியனர்களின் இடம்பெயர்வு இந்தியாவை பாதிக்குமா...
1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேல் முதலீட்டுச் செல்வத்தைக் கொண்டவர்களையே, மில்லியனர்கள் அல்லது அதிக நிகர சொத்து மதிப்புள்ள நபர்கள் என்கின்றது இந்த அமைப்பு.

``இந்த மில்லியனர்கள் வெளியேற்றம் பற்றி இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை.. ஏனெனில் இந்தியா இடம்பெயர்தலில் இழப்பதை விட, அதிகமான புதிய மில்லியனர்களை உருவாக்குகிறது" என நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமொயில்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

``கடந்த பத்தாண்டுகளில் மில்லியனர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது. 2023 மற்றும் 2024-ம் ஆண்டில் முறையே 1,22,000 மற்றும் 1,28,000 மில்லியனர்கள் உலகளவில் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று ஹென்லி & பார்ட்னர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜூர்க் ஸ்டெஃபென் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக