வியாழன், 22 ஜூன், 2023

வட மாகாணத்தில் மாணவரின்மையால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில்

hirunews.lk  : வட மாகாணத்தில் மாணவர்கள் இன்மையினால் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா - கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள், மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது.
இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.
இதேநிலை மட்டக்களப்பிலும் ஏற்பட்டுள்ளமையை கடந்த 7 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போது அவதானிக்க முடிந்தது.


முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகள் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்கள் அப்போது தெரிவித்தனர்.

எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

பல சமூக பிரச்சினைகள் தற்போது அதிகரித்துள்ளன.
எனவே எல்லாவற்றையும் கடந்து சமூகம் இருப்பு அவசியம் என்பதை உணர்ந்து புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது.
வெறுமனே உரிமை பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்லாமல் எங்களது பிரச்சினைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக