சனி, 10 ஜூன், 2023

‘ஊதியம் கிடையாது’.. 12 000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி

 மின்னம்பலம் Kavi  :  தமிழகத்தில் பணியாற்றும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12,000 பேர் பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் கடந்த மே மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், மே மாதம் ஊதியம் வழங்கப்படாததால் அந்த மாதம் செலவுக்கு மிகவும் சிரமப்படுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.


திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 181ல் கொடுத்த வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதோடு கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதத்தில் நல்லதொரு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து எதிர்பார்ப்பதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் இந்த முறையும் மே மாதம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”மற்ற ஆசிரியர்களுக்கு அனைத்து மாதங்களுக்கும் ஊதியம் வழங்கும் நிலையில் எங்களுக்கு மட்டும் ஏன் மே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் 181ஆவது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக