Maalaimalar .டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்கு தற்காலிகமாக தீபக் பபாரியா பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
புதுடெல்லி: மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளது.
இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் கோவா மாநில பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டுவாவ் மற்றும் மகாராஷ்டிர மாநில பொறுப்பாளராக இருந்த எச்.கே.பாட்டீல் ஆகியோர் சமீபத்தில் கர்நாடகத்தில் புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு மந்திரி சபையில் இடம் பெற்று உள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு பதிலாக தமிழ்நாடு, கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு புதிதாக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
குஜராத் மாநில பொறுப்பாளராக இருந்த முன்னாள் ராஜஸ்தான் மாநில மந்திரி ரகு சர்மா பதவி விலகியதை தொடர்ந்து அம்மாநில காங்கிரஸ் தலைவராக சக்திசிங் கோகில் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் குஜராத்துக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட இருக்கிறார். டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்கு தற்காலிகமாக தீபக் பபாரியா பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
விரைவில் புதிய பொறுப்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.
உத்தரகாண்ட், திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில பொறுப்பாளர்களும் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அவர் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. பஞ்சாப் பொறுப்பாளராக உள்ள ஹரீஸ் சவுத்திரி சொந்த மாநிலமான ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்.
இதனால் அவரும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதே போல காங்கிரஸ் மாநில தலைவர்கள் சிலரும் மாற்றப்பட உள்ளனர்.
புதுச்சேரி, குஜராத், மும்பை ஆகிய தலைவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட், ஒடிசா மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற பிறகு முதன் முதலாக இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக