வியாழன், 4 மே, 2023

இலங்கையில் தமிழ் மஹாயான பௌத்த அடையாளங்கள் சிங்கள தேரவாத பௌத்த அடையாளங்கள் ஆகிறது?

May be an image of temple and text

Thanam Vettivelu  :   நண்பா்களே!  இன்று 03.05.2023 புதன் கிழமையன்று உடுவிலின் ”சித்தாவத்தை” என்ற இடத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் கோயிலின் (இன்று மீனாட்சி சுந்தரேசர் கோயில் என அழைக்கப்படுவது) ஒன்பதாவது திருவிழாவான சப்பறத் திருவிழா ஆகும்.
இந்தக் கோயிலானது உடுவில் பெரு வயலின் தெற்கு நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
உடுவில் பெரு வயலைச் சுற்றி அமைந்துள்ள உடுவில், கந்தரோடை, கொத்தியவத்தை, சுண்ணாகம் என்ற இடங்களில் மஹாயாண பௌத்தத்தை மக்கள் பண்டைக் காலத்தில் தழுவி வந்திருந்த நிலையில், இவ்விடங்களில் 7 -8 அடி உயரமுடைய புத்தர் சிலைகள், சிறிய தகோபாக்களின் கூட்டம், பண்டைய பலவகைப்பட்ட நாணயங்கள், சிறு சிலைகள், பிராமி எழுத்து மட்பாண்டங்கள், மணிகள், ஏனையவைகள் என மஹாயாண பௌத்த எச்சங்கள் 1917 முதல் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும் இப்பகுதிகளில் முன்னரிலிருந்து கண்ணகி கோயில்களும், புத்தராயர் கோயில்களும், ஐயன் கோயிலும் இருந்து வருகின்றன.
ஆனால், இன்று ”இந்து மயமாக்கல்” தீவிரமாக நடைபெறும் நிலையில், புத்தராயர் கோயில்கள் எல்லாம் பிராமணர் பூசை செய்யும் ”சிவ பூதராயர் கோயில்கள்” ஆக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தினை நியாயப்படுத்துவதில் யாழ் பல்கலைக் கழகத்தின் போலிக் கற்றோர்ளுக்கும் முக்கிய பங்குண்டு.
நாங்கள் சிறுவர்களாக ஓடித் திருந்த காலத்தில் கல்லாக்கட்டுவனில் (சுண்ணாகம் தெற்கு) அரச மரத்தடியில் அமைந்திருந்த சிறிய  புத்தராயர் கோயிலில் காலில் மிதியடிகளை அணிந்து, கையில் விரி குடையைக் காவும் புத்தரது சிலைதான் இருந்துவந்தது.
முன்னர் இப்பகுதியில் இருந்து வந்த கண்ணகி கோயில்கள், புத்தராயர் கோயில்கள், வைரவர் கோயில்கள் என இன்று அழைக்கப்படும் திரிசூலம் வைத்து வணங்கப்படும் கோயில்களில் பிராமணர்களைக் கொண்டு பூசை செய்யப்படுவதில்லை. 1970ஆம் ஆண்டுகளின் பின்னர்தான் இக்கோயில்களில் பிராமணர் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கையிலுள்ள பிராமணச் சாதியினர்கள் சைவா்கள் அல்லாது வைஷ்ணவாகளாக இருந்து வரும் நிலையில், இலங்கையின் சைவத்தின் குருக்கள் சைவத்தினைப் போதிப்பவர்களாக இல்லை.
இலங்கையின் சைவத்தில்தான் அதன் சமயக் குருக்கள் அந்தச் சமயத்தினைச் சாதாரண மக்களுக்குப் போதிப்பதில்லை!!
தமிழர்கள் தமது வரலாற்றினைச் சரியாக அறியாது, கற்றோர் எனப்படும் போலிகளின் பிழையான வழிகாட்டல்களால், இந்திய ஆளும் வர்க்கத்தின் ”இந்து மயமாக்கல்” திட்டத்தினுள் மாண்டுள்ளனர்!
இதனால், தமிழ் மஹாயாண பௌத்த எச்சங்கள் எல்லாம் சிங்கள தேரவாத பௌத்த எச்சங்கள் ஆகின. இலங்கையின் அரசியலும் இன்று சிக்கலடைந்துள்ளது.
நாடு மெல்ல மெல்ல ஆளப்படமுடியாத ஒரு நாடாக மாறி வருகிறது. எல்லாம் அறியாமையால் எழுந்த பிரச்சினைகள்தான்.
இக்கோயிலின் சப்பறத் திருவிழாவினை சித்தாவத்தையைச் சேர்ந்த எனது தந்தைவழி முன்னோர்கள் செய்து வந்த நிலையில், இப்பொழுது எமது குடும்பத்தில் எஞ்சியிருக்கும் நானும், எனது சகோதரியும் செய்கிறோம்.
எனது தந்தை வழி முன்னோர்கள் சித்தாவத்தையும், ”சங்கவெளி” (இன்று சங்குவேலி என அழைக்கப்படும்) கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
கடந்த இரு நாட்களாக எனது கிராமத்தில் மழை தொடர்ந்து பெய்வதால், இன்று மாலையில் சப்பறத்தை வெளிவீதியில் இழுக்க முடியுமாக இருக்குமா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக