செவ்வாய், 2 மே, 2023

பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் திமுக வழக்கு தொடுக்காது.. தனிப்பட்ட விவகாரம்": டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

 
tamil.oneindia.com  - Vignesh Selvaraj சென்னை : "ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக வழக்கு தொடுக்காது எனத் தெரிவித்துள்ளார் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பேசுவதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தீயாகப் பரவியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது முன்னோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்ததை விட இந்த 2 ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சம்பாதித்து விட்டதாக பிடிஆர் பேசுவது போன்ற ஒரு ஆடியோவை அண்ணாமலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்பினார்.


அதைத் தொடர்ந்து, பிடிஆர் பேசுவதாக இன்னொரு ஆடியோ வெளியானது. அதில், பாஜகவிடம் பிடித்த விஷயமே ஒரு நபர், ஒரு பதவி என்ற கொள்கை தான். கட்சியில் ஒருவர், ஆட்சியில் ஒருவர், ஆனால், திமுகவில் எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும் தான். தற்போது நான் பதவி விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும் என பிடிஆர் பேசுவதாக இருந்தது.

அடுத்தடுத்து 2 ஆடியோக்கள் வெளியான நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ பதிவுகள் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ க்ளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது என்றும், தான் இவ்வாறு யாரிடமும் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து பேசினார். ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்த நிலையில், நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆடியோ விவகாரம் குறித்துப் பேசியுள்ள திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "ஆடியோ விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக வழக்கு தொடுக்காது.

ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக