வியாழன், 13 ஏப்ரல், 2023

பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் .. ஆளுநர் விவகாரம் -

 மாலை மலர்  :   சென்னை: தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிர்வாக ரீதியில் பிரச்சினை இருந்து வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
இதற்கிடையே, ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக நேற்று முன் தினம் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது போன்றே தனித்தீர்மானத்தை அனைத்து மாநில சட்டசபையிலும் நிறைவேற்ற வேண்டுமென பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில முதல் மந்திரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு, ஜனாதிபதி தகுந்த அறிவுரை வழங்கிட வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக